Published : 29 Jun 2020 08:48 AM
Last Updated : 29 Jun 2020 08:48 AM
பிஹார் தலைநகர் பாட்னாவில் கங்கை நதிக்கு குறுக்கே மகாத்மா காந்தி பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்து பிஹார் அரசு அறிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலிலல் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் எழுந்து வருகிறது. சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷமும் வலுத்து வருகிறது.
மேலும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வெளிப்படையாகவே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று முழுக்கமிட்டுள்ளனர்.
பிஎஸ்என்எல் நிறுவனமும் 4ஜி தொழில்நுட்பத்துக்கு சீனப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில்வே அமைச்சகமும் சமீபத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
மகாராஷ்டிரா அரசு சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. சீனாவிலிருந்து 500 வகையான பொருட்கள் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றன அவற்றை தடை செய்ய வேண்டும் என இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான சிஏஐடி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில் பிஹாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை பிஹார் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
பட்னாவில் கங்கை நதியின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை-19 இணைக்கும் வகையிலும் 4 வழிப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் ஒரு ரயில்வே மேம்பாலம், 4 சிறிய பாலங்கள், 13 சாலைகளை இணைக்கும் பாலம், பேருந்துகள் நிறுத்தும் 5 நிறுத்தங்கள் என மிகப்பெரிய திட்டமாகும்.
இந்த பாலம் ஏறக்குறைய 5.63 கி.மீ தொலைவு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2,900 கோடியாகும், ஒட்டுமொத்தமாக 3.5 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டு இந்தப்பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டது.
பாட்னா, சராலி, வைஷாலி ஆகிய 3 மாவட்ட மக்களின் நலனுக்காகவும், மழை வெள்ளத்தின் போது எளிதாக வந்து செல்லவும் இந்த மெகா திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்த விடுக்கப்பட்ட டெண்டரில் 4 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. அதில் இரு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்காக பிஹார் அரசு தேர்வு செய்திருந்தது. அந்த இரு நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்ததால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது பிஹார் அரசு
இதுகுறித்து பிஹார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட ரூ.2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம்.
அந்த இரு நிருவனங்களும் சீனாவின் "சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி", "ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி" ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த இருந்தன.
நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்த கோரினோம். அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால், ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். மீண்டும் புதிதாக டெண்டர் விடுவோம்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT