Published : 28 Jun 2020 08:08 PM
Last Updated : 28 Jun 2020 08:08 PM

சீனாவுக்கான இளகிய ஓர் இடம் பிரதமர் மோடி மனதில்உள்ளது; பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்களின் நன்கொடை- : பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி.

சீனா மீது பிரதமர் மோடியின் மனதில் ஒரு இளகிய இடம் உள்ளது என்று கூறும் காங்கிரஸ் கட்சி, பிஎம் கேர்ஸ் நிதிக்கு முழுதுமோ அல்லது பகுதியளவோ சீனாவுக்குச் சொந்தமான நிறுவானங்கள் சில நன்கொடை அளித்ததன் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பிரதமர் தேசிய நிவாரன நிதியிலிருந்து 2005-09 காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை சென்றதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்ட தற்போது பிஎம் கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்திருப்பதாக காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஆக்ரமிப்பை திசைத்திருப்ப காங்கிரசை குறிவைத்து பாஜக தாக்கி வருகிறது, என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

‘திசைத்திருப்பும் உத்தி’

இது தொடர்பாக பாஜகவின் திசைத்திருப்பும் உத்தி பற்றி காங்கிரஸ் கட்சியின் கரோனா பாதிக்கப்பட்ட தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனிமை மையத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங்கில் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் சீன அத்துமீறல்களைக் கேள்வி கேட்கும் போதெல்லாம் நழுவும் மோடி அரசு, பயம் கொண்ட பாஜக எப்போதும் திசைத்திருப்பும் உத்திகளைக் கையாளும். அல்லது தவறான செய்திகளை அளிக்கும். காங்கிரஸ் கட்சி தேச நலனுக்காக இத்தகைய கேள்விகளை எப்போதும் கேட்கவே செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்..

இந்தியப் பகுதியில் சீனா ஆக்ரமிப்பு இல்லை என்று மோடி கூறுவதன் மூலம் நாட்டுக்கு அவர் நல்லது செய்யவில்லை. சீனாவின் மீது மோடி மனதில் ஒரு இளகிய இடம் உள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது கூட 4 முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனாவுக்கு 5 முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீன நிறுவனங்கள், சீனாவினால் நிதி முதலீடு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் பிஎம் கேர்சுக்கு உதவி அளித்துள்ளன. ஹாவேய் ரூ.7 கோடி, ஷியோமி ரூ.15 கோடி, ஓப்போ ரூ. 1கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்துள்ளன. ரூ.100 கோடி பிஎம் கேர்சுக்கு நன்கொடை அளித்த பேடிஎம் நிறுவனத்தில் 38% சீன முதலீடு உள்ளது. அதே போல் சீன சமூக வலைத்தள நிறுவனமான டிக் டாக் ரூ.30 கோடி பிஎம் கேர்சுக்கு நிதியளித்துள்ளது. இதுவரை இந்த நிதியின் கீழ் ரூ.9,678 கோடி திரட்டப்பட்டுள்ளது” என்றார் சிங்வி.

பிஎம் கேர்ஸ் எப்படி இயங்குகிறது, யார் கட்டுப்படுத்துகிறார்கள்? ஒருவருக்கும் தெரியாது. அந்த நன்கொடை எதற்குப் பயன்படுத்தப் படுகிறது? தெரியாது. சிஏஜி உட்பட எந்த ஒரு பொது அதிகாரம் படைத்த அமைப்பும் அதனை தணிக்கை செய்ய முடியாது. பொது அதிகரத்தின் கீழ் வரும் அமைப்பேயல்ல அது என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இதன் நடவடிக்கைகள் மூடுண்ட அமைப்பாக ரகசியமாக நடந்து வருகின்றன. வெளிப்படத்தன்மை பூஜ்ஜியம் பொறுப்பேற்பு பூஜ்ஜியம், என்றார் சிங்வி மேலும் கூறும்போது.

சீனாவின் மீது வேறுபாடுகள் இருக்கிறது என்றால் ஏன் சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்க வேண்டும். அதே போல் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பிஎம் கேர்ஸுக்கு நிதி திருப்பி விடப்படுகிறதா?

ஒரு நாட்டின் பிரதமர் தன்னுடைய பதவியை சமரசம் செய்து கொண்டு சீன நிறுவனங்களிடமிருந்து ரூ.100 கோடி பெறுமான நன்கொடைகளைப் பெற்றால் அதுவும் சர்ச்சைக்குரிய மூடுண்ட ரகசிய விதங்களில் பெற்றால், அவர் எப்படி சீனாவின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்துவார், தடுப்பார்? பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும்” என்று சிங்வி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x