Last Updated : 28 Jun, 2020 03:52 PM

1  

Published : 28 Jun 2020 03:52 PM
Last Updated : 28 Jun 2020 03:52 PM

4-வது கட்ட வந்தேபாரத் மிஷன் ஜூலை 3-ம் தேதி தொடக்கம்: 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்க திட்டம்

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்து வரும் வந்தேபாரத் மிஷன் 4-வது கட்டம் வரும் ஜூலை3ம் தேதி முதல் 15-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த 4-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 17 நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 170 விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சர்வதேச விமான சேவையை கடந்த மார்ச் 23-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. இதனால் வெளிநாடுகளில் சுற்றுலா, பணி நிமித்தம், சிகிச்சை, உறவினர்கள் சந்திப்பு போன்றவற்றுக்காகச் சென்ற இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

இதையடுத்து, மே 6-ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அ ரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வருகிறது மத்திய அரசு.

ஏற்கெனவே 3 கட்டங்கள் முடிந்த நிலையில் ஜூலை 3-ம் தேதி முதல் 4-வது கட்ட வந்தே பாரத் தி்ட்டம் தொடங்கப்படுகிறது. இந்த தி்ட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிரிகிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

இதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கு 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்றாவது கட்ட வந்தே பாரத் திட்டம் கடந்த 10-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிகிறது. இதில் பல்ேவறு நாடுகளுக்கு 495 விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ஜூலை மாதம் நடுப்பகுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்திருந்தார். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஜூலை 15-ம் தேதிவரை சர்வதேச விமானப் போக்குவரத்தை மத்திய அ ரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x