Published : 28 Jun 2020 12:36 PM
Last Updated : 28 Jun 2020 12:36 PM
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அரசியலிலிருந்து விலகுவதாகவும், பாஜகவிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்துச் சென்ற முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மீண்டும் அரசியலுக்குள் வரப்போவதாகத் தெரிவித்துள்ளார்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் விரைவில் கட்சி தொடங்கி, அதன் பெயரையும் வெளியிடப்போவதாக யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, 24 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் இருந்துவிட்டுக் கடந்த 1986-ம் ஆண்டு ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் 1990 முதல் 1991ம் ஆண்டு வரை நிதி அமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பு வகித்தார்.
அதன்பின் பாஜகவில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா தலைமை செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். கடந்த 1998-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அதன்பின் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஹசாரிபார்க் தொகுதியில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் மீண்டும் மாநிலங்கள் அவை எம்.பி.யாக யஷ்வந்த் சின்ஹா, 2009ம் ஆண்டு தனது பாஜக துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் பாஜக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட நிலையில் யஷ்வந்த் சின்ஹா கட்சியில் முக்கியத்துவம் இன்றியே இருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்தபின் பல்வேறு கட்டங்களில் அந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்துவந்த யஸ்வந்த் சின்ஹா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், எந்த கட்சியிலும் இனி சேரப்போவதில்லை எனவும் அறிவித்து அரசியலில் இருந்து சின்ஹா ஒதுங்கினார்
இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, மீண்டும் அரசியலுக்குள் வரப்போவதாக யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
இது குறித்து யஷ்வந்த் சின்ஹா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
" பிஹார் மாநிலத்தின் நிலையைப் பார்த்து மீண்டும் அரசியலுக்குள் வர முடிவு செய்துள்ளேன். விரைவில் கட்சித் தொடங்கி, பெயரையும் அறிவிப்பேன். பிஹார் மாநிலத்தை சிறப்பானதாக்கவும், முன்னேற்றவும் எனது கட்சி கடுமையாக உழைக்கும்
பிஹார் மாநிலம் மோசமான நிலைக்குச் சென்றது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சியே நேரடிக்காரணம். கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் யாரும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு ஏதும் செய்யவில்லை.
அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் நாட்டிலேயே மிகவும் மோசமான இடத்தில் பிஹார் மாநிலம் இருக்கிறது நாட்டின் சராசரி மனிதனின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்குதான் மக்களின் வருவாயாக மாநிலத்தில் இருக்கிறது.
மருத்துவ வசதி, கல்வி அனைத்திலும் நாட்டிலேயே மோசமான இடத்தில் இருக்கிறது, தொழில்துறை வளர்ச்சியும் 1.5 சதவீதம் மட்டுமே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி, ஊழல் அதிகரித்துள்ளது.
நான் தொடங்கும் கட்சி முழுமையாக பிஹார் மாநிலத்தின் வளர்ச்சிகாகவும்,பிஹாரை சிறப்பானதாக்கவும் உழைக்கும்”
இவ்வாறு யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT