Published : 27 Jun 2020 05:11 PM
Last Updated : 27 Jun 2020 05:11 PM

டெல்லியில் ஆன்டி-பாடிஸ் சோதனை தீவிரம்: ஜூலை 10-ம் தேதி முடிவுகள் வெளியீடு

புதுடெல்லி

டெல்லியில் ஆன்டி-பாடிஸ் எனப்படும் பிறபொருளெதிரிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் சோதனையை தொடங்கியுள்ள நிலையில் முடிவுகள் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்படும் என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. தேசியத் தலைநகர் டெல்லி பிராந்தியத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி,, பராமரிப்பதற்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது. டெல்லியில் இதுவரை, 4.7 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனைகள், அங்கு இயங்கும் 12 சோதனைக் கூடங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்குத் தேவையான 1.57 லட்சம் ஆர்என்ஏ கண்டறியும் உபகரணங்களையும் அது வழங்கியுள்ளது.

2.84 லட்சம் விடிஎம்கள் (தொற்று கடத்தும் ஊடகம்), மாதிரிகள் சேகரிக்கப் பயன்படும் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. திடீரென அதிக அளவில் கொவிட் பரவல் இருப்பதைத் தொடர்ந்து, ஆன்டிஜன் அடிப்படையிலான துரித சோதனைகளுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவிட் வெகு வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையிலான, இத்தகைய சோதனை செய்யும் கருவிகள் 50 ஆயிரத்தை டெல்லி அரசுக்கு அது வழங்கியுள்ளது.

இந்தச் சோதனைக் கருவிகள் அனைத்தையும் ஐசிஎம்ஆர் டெல்லி அரசுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய நோய்த் தடுப்பு மையம், டெல்லி அரசுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மூலம், கோவிட்-19 கண்காணிப்பு மற்றும் மீட்பு உத்திகளின் அனைத்து அம்சங்களிலும் ஆதரவு அளித்துள்ளது.

தேசிய நோய்த் தடுப்பு மையம் டெல்லி முழுவதும் 2020 ஜூன் 27 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை நீரியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. உடலில் ஆன்டி-பாடிஸ் எனப்படும் பிறபொருளெதிரிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் சோதனைக்காக, 20,000 பேரின் ரத்த மாதிரிகளில் சேகரிக்கப்படவுள்ளது.

இதற்காக டெல்லியின் பல பகுதிகளில் இன்று மாதிரிகள் எடுக்கப்பட்டன. பல்வேறு வயது கொண்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த சோதனையின் முடிவுகள் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்படும் என துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x