Published : 27 Jun 2020 02:14 PM
Last Updated : 27 Jun 2020 02:14 PM
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரோனாவில் உயிரிழந்த 70 வயது முதியவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் தூக்கிச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்த கொடுமை நடந்துள்ளது.
கரோனாவில் உயிரிழந்தவர்களைக் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும்கூட இதுபோல் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள், ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், உதயபுரம் தாலுகாவில் உள்ள பழசா கிராமத்தில் 70 வயது முதியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது நேற்று காலை தெரியவந்தது. இதனால் அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதில் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டு ஒதுங்கிக்கொண்டனர்.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த முதியவரின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்வதாக அறிவித்தனர். அதன்படி நகராட்சி ஊழியர்கள் சிலர் முறைப்படி பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து வந்தனர். ஆனால், அந்த முதியவரின் உடலை அவர்கள் தூக்காமல் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தூக்கிச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர் சமூக வலைதளத்தில் பரப்பினர். கரோனா வைரஸால் உயிரிழந்த ஒரு முதியவரின் உடலைக் கண்ணியத்தோடு அடக்கம் செய்யாமல் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அடக்கம் செய்தது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
இது தொடர்பான வீடியோவை தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த குப்பம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை அரசுக்குப் பதிவு செய்தார். ''கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடலை இப்படியா மரியாதையின்றி மண் அள்ளும் இயந்திரத்திலும், டிராக்டரிலும் அப்புறப்படுத்துவது. இது ஆளும் ஓய்எஸ்ஆர் அரசுக்கு வெட்கக்கேடு'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் இதே ஸ்ரீகாகுளம் மாவட்டம் சேம்பட்டையில் நடந்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கரோனாவில் உயிரிழந்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உடலையும் தூக்கிச் சென்று அடக்கம் செய்யாத நகராட்சி அதிகாரிகள் டிராக்டரில் வைத்து எடுத்துச் சென்று இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களும் ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோக்களைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் நிவாஸ், முதியவரின் உடலை மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் தூக்கிச் சென்றவர்ள் மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் நாகேந்திர குமார், சுகாதார ஆய்வாளர், பிபிஇ உடை அணிந்திருந்த நகராட்சி ஊழியர்களைப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், டிராக்டரில் பெண்ணின் உடலை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவி்ட்டுள்ளார்
இதுகுறித்து மாவட்டஆட்சியர் ஜே.நிவாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “இது துரதிர்ஷ்டவசமான சம்பவம். கரோனாவில் இறந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழலில் முடிவு எடுக்க முடியாவிட்டால் உயர் அதிகாரிகளை உள்ளூர் அதிகாரிகள் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும், இப்படி வெறுப்புடன் நடந்து கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார்.
#WATCH Andhra Pradesh: Body of a 70-year-old person who died of #COVID19 being disposed of using a proclainer by Palasa municipal authorities in Srikakulam yesterday.
Palasa Municipal Commissioner & Sanitary Inspector have been suspended, says Srikakulam District Collector. pic.twitter.com/NCcMrxtRmL— ANI (@ANI) June 27, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT