Published : 26 Jun 2020 11:33 AM
Last Updated : 26 Jun 2020 11:33 AM
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளது, இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்ததாக பாஜக தலைவர் ஜேபி. நட்டா கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இப்படிப் பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக திருப்பி விடுவது பெரிய மோசடி என்பதோடு இந்திய மக்களுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகமும் ஆகும் என்று நட்டா சாடியுள்ளார்.
நேற்று ரவிசங்கர் பிரசாத் சாடும்போது, சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கமாக சீனா, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதியை லஞ்சமாக அளித்தது என்று ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்ட ஜே.பி.நட்டா, ‘பார்ட்னர் ஆர்கனைசேஷன் அண்ட் டோனர்ஸ் இயர் 2005-06, மற்றும் 2007-08 ஆகியவற்றின் விவரங்களைப் பார்த்த போது பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நட்டா மேலும் கூறும்போது, “பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுதும் பேரிடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதிலிருந்து குடும்ப அறக்கட்டளையான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நிதி நிவாரண நிதி வாரியத்தின் தலைவர் யார்? சோனியா காந்தி, ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைமைப் பதவியில் இருந்தது யார்? சோனியாதான். எந்த வித அறவுணர்வும் இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன” என்று அவர் தொடர் ட்வீட்களில் கடுமையாகச் சாடினார்.
மேலும், “இந்திய மக்கள் தாங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை பிரதமர் நிவாரணத்துக்கு அளிக்கின்றனர். சக மனிதனுக்கு உதவ அனுப்புகின்றனர். இந்தப் பொதுமக்கள் பணத்தை குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிப்பது பெரிய மோசடி மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.
ஒரு குடும்பத்தின் பணத்தின் மீதான ஆசை தேசத்தையே பாதித்துள்ளது. இப்படி சுயலாபத்துக்காக தேச மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்ததற்கு காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும். காங்கிரஸின் ஏகாதிபத்திய பரம்பரை சுயலாபக் கொள்ளைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று காட்டமாகப் பேசியுள்ளார் நட்டா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT