Published : 26 Jun 2020 11:42 AM
Last Updated : 26 Jun 2020 11:42 AM
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சோஷலிசக் கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டவருமான ஜெயபிரகாஷ் நாராயணன், நாட்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். 'பாரத ரத்னா' விருது பெற்றவர். 1970-களில் இந்திரா காந்திக்கு எதிராக அரசியல் செய்த இவர், 1977-ல் நாட்டிலேயே முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத (ஜனதா கட்சி) ஆட்சி அமைய உதவினார். ஆனாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படாத மனிதர்.
அவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளும், பல்வேறு இடங்களில் பேசிய பேச்சுகளும் 'என் சிந்தனைப் பயணம்' என்ற பெயரில் அவர் வாழ்ந்த காலத்திலேயே புத்தகமாக வெளியிடப்பட்டது. அந்த நூலில் இந்திய - சீனப் போர் குறித்து 1964 காலகட்டத்தில் அவர் எழுதியிருப்பது இன்றைய காலத்தில் மறுவாசிப்பு செய்யத்தக்கது. (வெளியீடு: பிரபாவதி தேவி ட்ரஸ்ட், சென்னை. மொழியாக்கம்: முனைவர் என்.சுந்தரம்)
இதோ அந்தப் பகுதி...
’’சீனாவுடனான எல்லைச் சிக்கலை போரினாலும் ஒருவரும் தீர்க்க முடியாது. நான் அகிம்சையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதனால்தான் சொல்கிறேன், போரினால் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இழந்த பகுதியைத் திரும்பப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். சண்டையினால் வரும் நட்டத்தை நம் நாடு தாங்காது. ஒவ்வொரு அங்குலம் நிலத்தையும் நாம் திரும்பப் பெறுவோம் என்று பறைசாற்றுவது எளிது.
அதன் பொருளை நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். 17, 18 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் உள்ள பகுதிக்கு உணவு மற்றும் ஆயுதங்களை அனுப்புவது என்பது எளிய செயல் அல்ல. அக்சய் சின் பகுதியில் சண்டையிடுவது லேசான காரியமும் அல்ல. ஆனால், சீனாவுக்கு அது எளிது. போர் மூலம் காணப்படும் தீர்வுதான் முடிவான தீர்வு என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் தோல்வியுற்ற தரப்பு இதை மாற்ற முடிவு செய்யும்.
போர் முடிந்த பிறகு அதனால் ஏற்படும் நிலைமையைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம். ராம - ராவணப் போர் நடந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் போர் உண்மையிலேயே நடைபெற்றதா அல்லது வெறும் கற்பனையா என்பது நமக்குத் தெரியாது. இருந்தாலும் இன்றும் தென்னிந்தியாவில் அதைப்பற்றிப் பேசுகிறார்கள். வடக்கே ராவணனின் பொம்மையை எரிப்பது போல, தென்னிந்தியாவில் இப்போதும் ராமனின் பொம்மைகளை எரிக்கிறார்கள். ராமன் படங்களைக் கிழிக்கிறார்கள். ராமன் ஆரியர்களின் பிரதிநிதி. அவன் (திராவிடரான) ராவணனுடன் போர் தொடுத்தான் என்று சொல்கிறார்கள். வடக்கே ராமாயணம் இருப்பதைப் போல, தெற்கே ராவண காவியம் எழுதியிருக்கிறார்கள். அதில் ராவணனைப் பெரிய தலைவனாகப் போற்றியிருப்பதோடு, ராமனைத் தூற்றியிருக்கிறார்கள். போரினால் ஏற்படுகிற முடிவுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
எனவேதான் சொல்கிறேன் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையை, வெறும் நிலப்பிரச்சினை போல தீர்ப்பின் மூலம் தீர்த்துவிட முடியாது. விட்டுக்கொடுத்துத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். விட்டுக்கொடுத்தல் என்பது சரணாகதி அல்ல. எல்லைப் பகுதியில் ஏற்படுகிற அமைதி இரு நாட்டிற்கும் முக்கியம் என்பதை உணர வேண்டும். நம்முடைய சிக்கியாங் மாகாணம் மற்றும் திபெத்துக்கு இடையே அக்சய் சின் என்ற பகுதி இருக்கிறது. சீனாவுக்கு இந்தப் பகுதி தேவைப்படுகிறது. பேச்சுவார்த்தை காரணமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
நம் நாடு இந்தப் பகுதியை சீனாவின் பயன்பாட்டுக்கென 100 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டும். சீனா அங்கு படைகளை நிறுத்தக்கூடாது. அங்கே இந்தியக் கொடி பறக்கும் என்ற நிபந்தனையோடு. அக்சய் சின் பகுதிக்குப் பதிலாக நாம் தும்பி பள்ளத்தாக்கைக் கேட்டுப் பெறலாம். இது நமக்குத் தேவையான பகுதி. அக்சய் சின் சண்டை ஓய்ந்தால், மெக்மோகன் எல்லை வரையறையைச் சீனா கண்டிப்பாக ஒப்புக்கொள்ளும் என்று நம்புகிறேன். இரு பெரிய நாடுகள் நூற்றாண்டுகளாக எதிரிகளாக இருக்க முடியாது, கூடாது’’.
இவ்வாறு ஜெயபிரகாஷ் நாராயணன் தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT