Published : 26 Jun 2020 08:40 AM
Last Updated : 26 Jun 2020 08:40 AM
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் நடந்த மோதலுக்கு சீனாவே காரணம். இரு நாடுகளிடையே கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங் களையும் சீனா அப்பட்டமாக மீறியுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க கடந்த 22-ம் தேதி இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, இருதரப்பினரும் படைகளை வாபஸ் பெற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சீன படைகள் பின்வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடர்ந்து சீன ராணுவ வீரர்கள் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரி சன் வெய்டாங் பதற்றத்தைக் குறைக்கும் பொறுப்பு இந்தியாவுக்குத்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எல்லையில் மோதலைத் தவிர்க்க இந்தியாவுடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கு சீனா தயாராகவே உள்ளது, ஆனால், ‘சந்தேகமும் உரசல்’ போக்குகளும் தவறான பாதையில் செல்வதாகவே முடியும். இந்த பாதை இருநாட்டு மக்களின் அடிப்படை எண்ணங்களுக்கு எதிரானதாக அமையும் என்று வெய்டாங் தெரிவித்துள்ளார்.
பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், “எல்லையில் சூழ்நிலையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இந்தியா சீனாவைப் பேச்சுவார்த்தைகள் மூலம் சந்தித்தால் எல்லையில் அமைதியை உருவாக்க தூலமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இப்போதைக்கு இருதரப்பு எல்லைப்பகுதியும் நிலைத்தன்மையுடனும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலும் தான் உள்ளது.
சீனாவும் இந்தியாவும் பெரிய வளரும் நாடுகள். வளர்ச்சியடையும் பொருளாதாரங்கள், இருநாட்டு மக்கள் தொகையும் 100 கோடியைக் கடந்தது. இருநாடுகளுக்குமே தங்கள் வளர்ச்சியையும் மறு உயிர்ப்பாக்கத்துக்குமான வரலாற்றுக் கடமை இருப்பதை உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.
சீனா தரப்பில் எதுவும் இல்லை, இந்தியாதான் எல்.ஏ.சி என்ற கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்தது. எங்களைத் தூண்டியது சீனப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியப் படைகள் இருநாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களை மீறியது இந்தியாதான்” என்றார்.
இந்தியா சீனாதான் காரணம் என்றது, அதற்குப் பதில் அளிக்கும் போது அதே குற்றச்சாட்டை இந்தியா மீது திருப்பினார் வெய்டாங்.
கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சீன ராணுவம் நேர்மையுடன் அமல்படுத்தவில்லை என் பதால் இந்திய ராணுவமும் எல்லையில் உஷார் நிலையில் உள்ளது. லடாக் மட்டுமன்றி 3,488 கி.மீ. தொலைவு கொண்ட சீன எல்லைப் பகுதி முழு வதும் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பான்காங் ஏரி பகுதிகளில் இந்தியப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள் ளன. பான்காங் ஏரியில் படகு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி களில் ராணுவ கவச வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகளும் தயார் நிலையில் உள்ளன’’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உரசல் போக்கும் சந்தேகமும் இல்லாமல் இந்தியாதான் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று சீன தூதர் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT