Published : 26 Jun 2020 07:58 AM
Last Updated : 26 Jun 2020 07:58 AM
கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி விதிகளை மீறி விளம்பரம் செய்யும் 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய விளம்பர தரநிர்ணய கவுன்சில் (ஏஎஸ்சிஐ) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ், கடந்த பிப்ரவரி முதல்இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, செயலில் இறங்கிய இந்திய ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கரோனாவைரஸ் நோயை குணப்படுத்துவதாகக் கூறி மருந்துகளை அறிமுகம் செய்தன. ஒரே நேரத்தில் சுமார் 50 மருந்துகளின் விளம்பரங்கள், கடந்த ஏப்ரலில் வெளியாயின.
இதுபோன்ற விளம்பரங்கள் மத்திய ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் விதிகளை மீறுவதாகும். இந்த வகை விளம்பரங்களை அடையாளம் காணுமாறு ஆயுஷ் அமைச்சகம், ஏஎஸ்சிஐ-க்கு அறிவுறுத்தி உள்ளது.
இதனால், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் மருந்துகளின் விளம்பரங்களையும் ஏஎஸ்சிஐ ஆராய்ந்து வருகிறது. இந்த வகையில் 50 நிறுவனங்களின் மருந்து விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏஎஸ்சிஐ சார்பில் மத்திய அரசுக்கு நேற்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஏஎஸ்சிஐ வட்டாரம் கூறும்போது, "பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியாஉள்ளிட்ட அனைத்திலும் வெளியாகும் மருந்துகளின் விளம்பரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதில் கடந்த2 மாதங்களில் சுமார் 90 விளம்பரங்கள் விதிமீறல்களுக்கு உள்ளாகின. இதில் 50 மருந்துகளின்விளம்பரங்கள் விதிகளை மீறியது உறுதிசெய்யப்பட்டு நடவடிக்கைஎடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
ஏஎஸ்சிஐ-யின் கண்காணிப்பில் சிக்கிய 90 மருந்துகள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் அல்ல. அவைஅனைத்தும் உள்ளூர்களில் உள்ள சிறிய நிறுவனங்களின் தயாரிப்புகள் எனத் தெரிகிறது. யோகா குரு பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி, கரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை புதிதாக அறிமுகம் செய்ததை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை. இதனால், பதஞ்சலி நிறுவனத்தின் புதியமருந்து குறித்த விளம்பரம் வெளியிட ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT