Published : 26 Jun 2020 07:03 AM
Last Updated : 26 Jun 2020 07:03 AM

எல்லையில் மோதலுக்கு சீனாவே காரணம்: மத்திய வெளியுறவுத் துறை பகிரங்க குற்றச்சாட்டு

சீன வீரர்களின் அத்துமீறலால் லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். லடாக்கின் லே மலைப்பகுதியில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள்.படம்: ஏஎப்பி

புதுடெல்லி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத் தாக்கு பகுதியில் நடந்த மோதலுக்கு சீனாவே காரணம். இரு நாடுகளிடையே கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங் களையும் சீனா அப்பட்டமாக மீறியுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே, எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாத தொடக்கத்தில் இமய மலையின் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்து மீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி மாலை இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக ராணுவ வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத் துறை உள்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தெரிவித் துள்ளன. எனினும் ராணுவ கமாண்டர் உள் பட 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீனா கூறி வருகிறது.

எல்லையில் பதற்றத்தைத் தணிக்க கடந்த 22-ம் தேதி இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, இருதரப்பினரும் படைகளை வாபஸ் பெற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சீன படைகள் பின்வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தொடர்ந்து சீன ராணுவ வீரர்கள் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.

எல்லையில் படைகள் குவிப்பு

கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சீன ராணுவம் நேர்மையுடன் அமல்படுத்தவில்லை என் பதால் இந்திய ராணுவமும் எல்லையில் உஷார் நிலையில் உள்ளது. லடாக் மட்டுமன்றி 3,488 கி.மீ. தொலைவு கொண்ட சீன எல்லைப் பகுதி முழு வதும் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பான்காங் ஏரி பகுதிகளில் இந்தியப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள் ளன. பான்காங் ஏரியில் படகு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி களில் ராணுவ கவச வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகளும் தயார் நிலையில் உள் ளன’’ என்று தெரிவித்தன.

கடந்த மே 22-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத் தில் அங்கு சீன ராணுவ தரப்பில் ஒரே ஒரு கூடாரம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எடுக்கப்பட்ட செயற் கைக்கோள் புகைப்படங்களில் சீன வீரர்கள் ஏராளமான கூடாரங்களை அமைத் திருப்பதும் ராணுவ தளவாடங்களை குவித்து வைத்திருப்பதும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் பெருமளவில் குவிக் கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் 54 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணை களான ‘ஸ்பைடர்-எம்.ஆர்’, ‘பைதான்-5’, ‘டெர்பி’ ரக ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகளும் சீன எல்லையை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருவதால் போர் பதற்றம் நீடிக்கிறது.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், பெய்ஜிங் கில் நேற்று முன்தினம் கூறும்போது, ‘‘கல்வான் பள்ளத்தாக்கு சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் சீன வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய வீரர்கள், சீன எல்லைக்குள் நுழைந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீண்டும் அத்துமீறி நுழைந்தனர். இதன்காரணமாகவே இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது’’ என்று தெரிவித்திருந்தார்.

சீனாவின் புகாருக்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நேற்று கூறியதாவது:

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி யாகும். இப்பகுதியில் பல ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மே தொடக் கத்தில் கிழக்கு லடாக் பகுதிகளில் சீன வீரர்கள்தான் அத்துமீறி நுழைய முயன்றனர். இரு நாடுகளிடையே கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங் களையும் மீறும் வகையில் சீன வீரர்கள் செயல்பட்டனர். இருதரப்பு மோதலுக்கு சீனாவே காரணம். இந்திய தரப்பில் எல்லைக்கோட்டை மாற்ற முயற்சி செய்ய வில்லை. ஆனால், சீன தரப்பு தொடர்ந்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. எல்லைக்கோட்டை மாற்ற முயற்சி செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தீவிர கண்காணிப்பு

இந்திய ராணுவம் சார்பில் லடாக் எல் லைப் பகுதிகளில் ‘ஹெரோன்’ ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் தீவிர கண் காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல சீன ராணுவம், ‘ஏஆர்-500சி’ உளவு விமானங்கள் மூலம் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங் கள் கூறும்போது, ‘‘கல்வான் பள்ளத்தாக் கில் சீன படைகளின் ஒரு பகுதி வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனினும் சர்ச்சைக் குரிய பகுதிகளில் சீன வீரர்களின் நட மாட்டம் உள்ளது. எல்லையில் சுதந்திரமாக செயல்பட முப்படைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, இனிமேல் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம். இந்திய எல்லைக்குள் சீன உளவு விமானங்கள் நுழைந்தால் சுட்டு வீழ்த்துவோம்’’ என்று தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x