Published : 25 Jun 2020 09:55 PM
Last Updated : 25 Jun 2020 09:55 PM

விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி; இந்தியாவைத் தற்சார்பு நாடாக்கும் தொலைநோக்கின் ஒரு அங்கமே : இஸ்ரோ தலைவர் 

விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்புக்கு அனுமதித்துள்ளது, சமூக-பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றும் மிகப்பெரிய தொலை நோக்கின் ஒரு பகுதியாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை வருமாறு:

விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்புக்கு அனுமதித்துள்ளது, சமூக-பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றும் மிகப்பெரிய தொலை நோக்கின் ஒரு பகுதியாகும். விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், நாடு முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆற்றலைப் பயன்படுத்தவும், விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்ஸ்-கள் ஆகியோரை பங்கேற்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகும். மேலும், விண்வெளித்துறையில் தேவைப்படும் கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான அரசு முதலீடுகளைக் குறைப்பதை இந்தச் சீர்திருத்ததங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இஸ்ரோவின் கீழ் ஏற்கனவே உள்ள வசதிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள இது ஏதுவாகும்.

விண்வெளி துறையை தனியார் பங்கேற்புக்கு திறந்துவிட்டுள்ள நடவடிக்கையின் பயனாக, வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், வேலை வாய்ப்புகள் அதிகரித்து, புதுமையான சிந்தனைகள் உருவாகி, உலக விண்வெளிப் பொருளாதாரத்தில், இந்திய விண்வெளித் தொழில் முக்கிய இடம் பிடிக்க வழி ஏற்படும்.

இந்தச் சீர்திருத்தங்களின் கீழ், இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) தன்னாட்சி பெற்ற சிறப்பு முகமையாக, விண்வெளித் துறையின் கீழ் உருவாக்கப்படும். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்து, நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் தனி அமைப்பாக இது இருக்கும். இன்-ஸ்பேஸ் தேசிய அதிகார முகமையாகச் செயல்பட்டு, விண்வெளித் துறையில் தனியார் பங்கேற்பதற்கு ஆதரவுக்கரம் நீட்டும். இதற்காக, இஸ்ரோ தனது கட்டமைப்புகளையும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும்

தனியாருடன் பகிர்ந்து கொள்ளும். தொழில்நுட்ப, சட்ட, பாதுகாப்பு ஆகியவற்றுக்கென தனி இயக்குநரகங்களை இன்-ஸ்பேஸ் கொண்டிருக்கும். தனியார் நிறுவனங்களின் தேவைகளை மதிப்பிட்டு, நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து ,மேம்படுத்திக் கண்காணிக்கும் பணியை அது மேற்கொள்ளும்.

கோள்களுக்கிடையிலான நவீன இயக்கங்களில் பங்கு கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இது வாய்ப்புகள் பற்றிய தொடர் அறிவிப்புகள் மூலம் திட்டமிடப்படும். விண்வெளிப் பயணத்திட்டத்தில் மனிதர்களை அனுப்பும் வாய்ப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு மறு-வரையறை செய்யப்பட்டு வருகிறது. விண்வெளி சார்ந்த சேவைகளில் விநியோகம், தேவை மாதிரிகளில் மாற்றம் செய்யும் அணுகுமுறையை அது மேற்கொள்ளும். ஏவு வாகனம், செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் சேவைகள் ஆகிய பிரிவில், இஸ்ரோவின் இயக்கச் செயல்பாடுகளுக்கு நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் அதிகாரமளித்து வலுப்படுத்தும். தொழில் கூட்டமைப்புகள் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை நியூஸ்பேஸ் இந்தியா செயல்படுத்தும்.

இந்தச் செயல்பாடு, எதிர்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்க இஸ்ரோவுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். இஸ்ரோ தற்போதைய தனது பணிகளுடன், நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், விண்வெளித் துறையில் திறன்மேம்பாட்டு நடவடிக்கைகளில் மேலும் தீவிரமாக செயல்படுவதுடன், விண்வெளித் துறையில் தனியாருக்கு ஒத்துழைப்பும் அளிக்கும்.

புதிய விழிகாட்டுதல் கொள்கை ஒன்றும் உத்தேசிக்கப்பட்டு வருகிறது. தொலைஉணர்வு தரவுக்கொள்கை மற்றும் சாட்காம் கொள்கை ஆகியவற்றில் உரிய மாற்றங்கள் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள், இந்தக் கொள்கைகளை ஒருங்கிணைத்து , வெளிப்படையான உள்ளார்ந்த விண்வெளித் துறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும்.

விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கு விரைவில் நடைபெறவுள்ளது. இன்-ஸ்பேஸ் பொறிமுறை, தேவைகளை செயல்படுத்துதல், வாய்ப்புகள் அறிவிப்பு, NewSpace India Ltd. - NSIL பங்கு ஆகியவை பற்றிய விரிவான தகவல்கள், சம்பந்தப்பட்டோருடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x