Published : 25 Jun 2020 03:36 PM
Last Updated : 25 Jun 2020 03:36 PM
எல்லைப் பாதுகாப்பின் உயர் பதவிகளில் திருநங்கைகளை அமர்த்த சீமா சுரக்ஷா பல் (எஸ்எஸ்பி) பரிசீலனை செய்கிறது. இதன் மீது இறுதி முடிவு எடுக்க நாடு முழுவதிலும் உள்ள தனது படை அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளது.
சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது கூடி வருகிறது. அதேசமயம், காவல்துறை உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும், தம் தனித்திறமைகளால் திருநங்கைகள் தேர்வாவதும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், மத்தியப் பாதுகாப்பு காவல் படைகளின் (சிஏபிஎப்) உயர் அதிகாரிகளான துணை கமாண்டன்ட் உள்ளிட்ட பதவிகளுக்கான திறனாய்வுத் தேர்வில் திருநங்கைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், சிஏபிஎப்பின் அனைத்துப் படைகளின் துணை கமாண்டன்டுகளாகவும் திருநங்கைகளை அமர்த்தும்படி, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் (டிஒபிடி) சார்பில் ஏப்ரல் 20 இல் அறிவுறுத்தி இருந்தது.
இதை சிஏபிஎப்பின் முதல் படையாக எஸ்எஸ்பி பரிசீலனைக்கு ஏற்றுள்ளது. மூன்றாவது பாலினமாக திருநங்கைகளையும் ஏற்பது குறித்து நாடு முழுவதிலும் உள்ள தனது படையினரிடம் கருத்து கேட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் எஸ்எஸ்பியின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''அடுத்து நடைபெறவிருக்கும் குடிமைப்பணித் தேர்வாணையத்தின் சிஏபிஎப் படைகளின் துணை கமாண்டன்டுக்கான திறனாய்வுத் தேர்வில் ஆண், பெண் என்பதை அடுத்து மூன்றாவது பாலினமாக திருநங்கைகளையும் சேர்க்க உள்ளோம்.
இதற்கு முன்பாக, சிஏபிஎப்பின் ஏழு வகையான படைப் பிரிவுகளின் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டி இருக்கும். எனவே, இதன்மீது எங்கள் படையினரிடம் கருத்து கேட்டுள்ளோம். இதன் அடிப்படையில் திருநங்கைகளை அப்பதவியில் அமர்த்தப்படுவார்கள்'' எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, எஸ்எஸ்பியின் முடிவை தானும் தொடர சிஏபிஎப்பின் மற்ற பாதுகாப்புப் படைகளான சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி மற்றும் பிஎஸ்எப் ஆகியவையும் விரும்புகின்றன. இதில், திருநங்கைகளை துணை கமாண்டன்டுகளாக அமர்த்துவது குறித்துப் பரிசீலிக்க உள்ளன.
இதுபோல், திருநங்கைகளை குடிமைப்பணிக்கான தேர்வாணையம் மூலமாக மத்திய அமைச்சகங்களின் பல்வேறு உயர் பதவிகளுக்கான திறனாய்வுத் தேர்வுகளிலும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக அவர்கள் மூன்றாம் பாலினம் எனும் புதிய பிரிவை உருவாக்க அந்த அமைச்சகங்களின் சட்டங்களிலும் திருத்தம் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றம் கடந்த ஆட்சியின் இறுதியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதா காரணமாகி உள்ளது.
இதில், திருநங்கைகள் உரிமைகள் மீதான பாதுகாப்பு மசோதாவில் மத்திய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தது. இதை அமலாக்கும் பணியில் தற்போது மத்திய பாதுகாப்பு படைகளும் முன்வந்திருப்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT