Published : 25 Jun 2020 03:16 PM
Last Updated : 25 Jun 2020 03:16 PM
கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியின்போது ஜனநாயகத்துக்காகப் போராடி தியாகம் செய்தவர்களை இந்த தேசம் மறக்காது என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 1975-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை ஜூன் 25-ம் தேதி கொண்டுவந்தார். நாட்டில் அவசர நிலை 1975 ஜூன் 25-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை அமலில் இருந்தது. நாட்டில் அவசர நிலை கொண்டுவந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த அவசர நிலை ஏறக்குறைய 2 ஆண்டுகள் வரை அமலில் இருந்தது. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இந்த 2 ஆண்டுகளும் கரும்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலை குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத் போன்றோர் விமர்சித்து வரும் நிலையில் பிரதமர் மோடியும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் எமர்ஜென்சி குறித்துப் பதிவிட்ட கருத்தில், “45 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. இந்திய ஜனநாயகத்தைக் காக்க, அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய மக்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நான் வணங்குகிறேன்.
அவர்களின் தியாகத்தை இந்த தேசம் மறக்காது. மக்கள் தங்களின் தேவைகளை, உரிமைகளை மறந்து கடந்த 1977-ம் ஆண்டு தேர்தலில் எமர்ஜென்சியை நீக்க வாக்களித்தார்கள். ஜனநாயகத்தைக் காக்க கடந்த 1977-ம் ஆண்டு அந்தத் தேர்தல் நடந்தது” எனத் தெரிவித்துள்ளார்
மேலும், பிரதமர் மோடி கடந்த 2019-ம்ஆண்டு ஜூன் மாதம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் எமர்ஜென்சி குறித்துப் பேசிய உரையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT