Published : 25 Jun 2020 01:07 PM
Last Updated : 25 Jun 2020 01:07 PM
விண்வெளிக்கு செயற்கைக்கோள், ராக்கெட் அனுப்புதல், அவற்றை உருவாக்குதல் போன்றவற்றில் இனிவரும் காலங்களில் தனியார் துறையும் அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கக்கூடியது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் இன்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விண்வெளித்துறையில் ராக்கெட் அனுப்புதல், கட்டமைப்பு, செயற்கைக்கோள் உருவாக்கம் கட்டமைப்பு, கோள்கள் ஆய்வுப்பணி போன்றவற்றில் தனியாரும் அனுமதிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் இன்று நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''சமூகப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பகுதியாக, விண்வெளித் துறையில் செய்யப்படும் சீர்திருத்தமும் விண்வெளித் துறையில் இந்தியாவின் மேம்பாட்டுக்கு உதவி புரியும். விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள் திறமையாகச் செயல்பட ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரம் அளித்தலுக்கான நீண்டகாலத் திட்டங்கள் இந்தியாவை முன்னணி நாடுகளுக்கான வரிசையில் வைக்கும்.
விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இருக்கும் நிலையில் இந்தியாவில் தனியார் துறை ஊக்குவிப்பு தொழில்துறையில் முக்கியப் பங்காற்றும்.
தனியார் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறையில் வாய்ப்பளிப்பதன் மூலம் இஸ்ரோவின் சாதனைகளை மேம்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் விண்வெளித் துறையில் தனியாரும் ஈடுபட முடியும். வரும் காலங்களில் தனியார் துறையும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புதல், தயாரித்தல், செயற்கைக்கோள் தயாரித்தல், அனுப்புதல், கோள்கள் ஆராய்ச்சி போன்றவற்றை வர்த்தக நோக்கில் செய்ய முடியும்.
தனியார் துறைக்கு விண்வெளித் துறையில் வாய்ப்பளித்துள்ளதை அடுத்து, நாட்டின் விண்வெளித் தொழில்நுட்பத்திலிருந்து முழுமையான திறனைப் பயன்படுத்த முடியும். விண்வெளித் துறையில் மட்டும் வளர்ச்சியை ஊக்கப்படுத்தாமல், உலகளாவிய விண்வெளிக்கான பொருளாதாரத்தில் இந்தியத் தொழில்துறையை முக்கியப் பங்காற்ற வைக்கும்.
விண்வெளித் துறையில் இனிவரும் காலங்களில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். உலகத் தொழில்நுட்ப சக்தியை தேக்கிவைக்கும் இடமாக இந்தியா மாறும்''.
இவ்வாறு சிவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT