Published : 25 Jun 2020 12:09 PM
Last Updated : 25 Jun 2020 12:09 PM
அவசர நிலை மனநிலையிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் அகலவில்லை. ஒரு குடும்பத்தின் நலன்தான் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் இருந்தது என்று உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா காங்கிரஸைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 1975-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை ஜூன் 25-ம் தேதி கொண்டுவந்தார். நாட்டில் அவசரநிலை 1975 ஜூன் 25-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை அமலில் இருந்தது. நாட்டில் அவசர நிலை கொண்டுவந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த அவசர நிலை ஏறக்குறைய 2 ஆண்டுகள் வரை அமலில் இருந்தது. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, கருத்துச்சுதந்திரம் பறிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இந்த 2 ஆண்டுகளும் கரும்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கொண்டு வந்த அவசர நிலை குறித்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''இந்த நாளில், 45 ஆண்டுகளுக்கு முன், ஒரு குடும்பத்தின் அதிகாரப் பேராசையால் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. ஒரு நாள் இரவில் இந்த தேசம் சிறைச்சாலையாக மாறியது. பத்திரிகை, நீதிமன்றம், பேச்சு சுதந்திரம், அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், வளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியர்கள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
லட்சக்கணக்கான மக்களின் கடினமான முயற்சிகளின் காரணமாக, தேசத்தில் அவசர நிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டும் வந்தது. ஆனால், இன்னும் காங்கிஸில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல்தான் இருக்கிறது.
ஒரு குடும்பத்தின் நலன்தான் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் இருந்தது. இந்த வருந்தத்தக்க நிலை, இன்றைய காங்கிரஸில்கூட நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் சமீபத்தில் நடந்தது அதில் மூத்த தலைவர்கள், இளம் தலைவர்கள் சிலப் பிரச்சினைகளை எழுப்பினர். ஆனால், அவர்கள் பேச்சில் கவனம் செலுத்தப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியாதையின்றி நீக்கப்பட்டார். வேதனைக்குரிய உண்மை என்னவென்றால், காங்கிரஸில் உள்ள தலைவர்கள் தங்களால் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க முடியவில்லை. சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார்கள்.
இந்தியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி, தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்வது அவசியம். ஏன் எமர்ஜென்சி மனநிலையில் இன்னும் இருக்கிறோம் என காங்கிரஸ் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்?
ஒரு குடும்பத்தின் பரம்பரையைத் தவிர்த்து மற்ற தலைவர்களால் ஏன் கட்சிக்குள் பேச முடியவில்லை என்று காங்கிரஸ் கேட்டுக்கொள்ள வேண்டும்?
காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் ஏன் மனம் வெறுக்கிறார்கள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.?
மக்களுடன் இருக்கும் தொடர்பு, நெருக்கம் காங்கிரஸுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே போன்ற கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்?''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தவிர்த்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்துப் பேசியது தொடர்பான கட்டுரையின் இணைப்பையும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தன்னுடைய செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ஷாவை நீக்கியது தொடர்பான கட்டுரையின் இணைப்பையும் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT