Published : 24 Jun 2020 02:45 PM
Last Updated : 24 Jun 2020 02:45 PM
நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2-வது எம்எல்ஏ பலியாகியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமோனாஷ் கோஷ் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
இவருக்கு ஏற்கெனவே இருதய நோயும், சிறுநீரக பாதிப்பும் இருந்ததால் கரோனாவும் அதனுடன் சேர கோ மார்பிடிட்டிஸ் தாக்கத்தில் சிகிச்சைப் பலனளிக்காமல் போனதாக மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.
தமிழகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் நாட்டிலேயே முதல் மக்கள் பிரதிநிதியாக, கரோனா வைரஸால் பலியானார். இப்போது 2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமோனாஷ் கோஷ், 3 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக கோஷ் இருந்து வந்தார். தற்போது தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பல்தா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக தமோனாஷ் கோஷ் இருந்தார்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் தமோனாஷ் கோஷ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினையும், இதய நோயும் இருந்துவந்தது. மருத்துவர்கள் அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அவருக்குத் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை தமோனாஷ் கோஷ் மருத்துவமனையில் உயிரிழந்தார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமோனாஷ் கோஷின் மனைவியும், மகளும் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்துவிட்டனர்.
கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியபோது தமோனாஷ் கோஷ் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது எனக் கூட்டத்தில் பிற எம்எல்ஏக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமோனாஷ் கோஷ் மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “மிகவும் வருத்தமாக இருக்கிறது. கட்சியின் பொருளாளரும் பல்தா தொகுதியில் 3 முறை எம்எல்ஏவுமான தமோனாஷ் கோஷ் மறைவு வேதனையளிக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து எங்களுடன் இருந்தவர் பிரிந்துவிட்டார்.
35 ஆண்டுகளாக மக்களுக்கும், கட்சிக்கும் ஏராளமான பணிகளை கோஷ் செய்துள்ளார். அவரின் சமூகப்பணிகள் மூலம் ஏராளமான உதவிகள் செய்துள்ளார்.
அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவது கடினம். எங்கள் அனைவரின் சார்பில் அவரை இழந்துவாடும் மனைவி ஜார்னா, இரு மகள்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏ தமோனாஷ் கோஷ் மறைவுக்கு ஆளுநர் ஜெகதீப் தனகரும் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், “பல்தா தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த தமோனாஷ் கோஷ் மறைவு வருத்தமளிக்கிறது. அனுபவமான தலைவராக வலம் வந்தவர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் மனைவி, குழந்தைகள், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT