Published : 24 Jun 2020 01:30 PM
Last Updated : 24 Jun 2020 01:30 PM
கரோனா வைரஸ் பரவலைக் கேரள மாநிலத்தில் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது. இந்தியாவில் இருந்து ஒரே ஒருவரும் அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருமான கே.கே.ஷைலஜா மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
ஐ.நா. சபை சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 23-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கொண்டாடப்பட்ட அந்த நாளில் கரோனா வைரஸை பரவலைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது
ஐ.நா.வின் வெப் தொலைக்காட்சி மூலம் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சின் யங், உலக சுகாதார அமைப்பன் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், எத்தியோப்பியா அதிபர் ஷாலே வொர்க் ஜூடே, ஐ.நா. மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றேனர்.
இதில் இந்தியாவின் சார்பில் கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கேரளாவில் கடந்த இரு முறை ஏற்பட்ட மழை வெள்ளக் காலத்தைச் சமாளித்த அனுபவம், நிபா வைரஸைத் திறம்படக் கையாண்டது போன்ற அனுபவம் கரோனா வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த உதவியது.
சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியதிலிருந்து கேரள அரசு விழிப்புடன் செயல்பட்டு, தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களைப் பின்பற்றத் தொடங்கியது.
எந்த ஒரு வழிகாட்டலையும் அலட்சியப்படுத்தாமல் தீவிரமாகச் செயல்படுத்தினோம். இதனால் கேரளாவில் கரோனா பரவல் 12 சதவீதத்துக்கும் கீழாகவே இருந்தது. உயிரிழப்பும் 0.6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டதும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனையைத் தீவிரப்படுத்தினோம், இதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. பல்வேறு தளங்களிலும் மாநில சுகாதாரத்துறை சிறப்பாகச் செயல்பட்டது.
குறிப்பாகக் கண்டுபிடித்தல், தனிமைப்படுத்துதல், பரிசோதனை, மீண்டும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய வழிமுறை மாறாமல் செயல்படுத்தினோம். மேலும் ரிவர்ஸ் குவாரண்டைன், பிரேக் த செயின் பிரச்சாரம் போன்றவையும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது” என்று அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.
நாட்டிலேயே முதலாவதாக கரோனாவில் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளாதான். சீனாவிலிருந்து திரும்பிய 3 மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு அவர்களை முழுமையாக குணப்படுத்தியது. இன்றைய நிலவரப்படி கேரளாவில் 3,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,809 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் பலியாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT