Published : 24 Jun 2020 08:37 AM
Last Updated : 24 Jun 2020 08:37 AM
இன்றுள்ள சூழலில் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தை துண்டிப்பதும், கதவுகளை மூடுவதும் இந்தியாவுக்கு ஒருபோதும் உதவாது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தபின், சீனப் பொருட்களை புறக்கணிக்கும் கோஷம் நாட்டில் அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் சிலரே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். மகாராஷ்டிரா அரசு, ரயில்வே துறை போன்றவை சீன நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளன.
இதுபோன்ற சீனாவுக்கான எதிர்ப்பலைகள் உருவாகி வரும் நிலையில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்
கொல்கத்தாவில் எம்சிசிஐ சார்பில் நேற்று ஒரு இணையதளவாயிலாக நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் காணொலி மூலம் தலைமைப் பொருளதாார ஆலோசகர் வி. சுப்பிரமணியன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது
கடந்த 1991-ம் ஆண்டுவரை இந்தியா இறக்குமதி மாற்று மாதிரியை பின்பற்றித்தான் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால், அந்த முறை வழக்கில் இருந்து சென்றுவிட்டது. நாம் உலகமயமாக்கலுக்குள் வந்தபின் அனைத்தும் மாறிவி்ட்டது.
இப்போதுள்ள சூழலில் இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டிபோடக்கூடிய வகையில் இருக்கிறது. அது தொழில், வர்த்தகம், சேவைத்துறை, உற்பத்தி அனைத்திலும் போட்டி போடுகிறது. இந்த சூழலில் (சீனா மட்டுமல்ல) எந்த நாட்டுக்கான கதவை மூடி அவற்றின் உதவியை பெறாமல் இருப்பது இந்தியாவுக்கு உதவாது.
இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. எல்லையில் ஒருசில நாடுகளுடன் நாம் பிரச்சினையில் இருக்கும் அந்த நாட்டுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லமாட்டேன்.
கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இன்னும் இந்தியாவில் குறையவில்லை. உள்நாட்டில் அனைத்து துறைகளிலும் தேவை உயர்ந்து வருகிறது, பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிவருகிறது என்று இப்போதைக்கு கூற முடியாது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலைக்கு முக்கியக் காரணம் மக்களின் உடல்நிலை சார்ந்த பிரச்சினைதான். வெளியில் சுதந்திரமாக நடமாடினால் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தால் மக்கள் இன்னும் முழுமையாக வெளியே வர அச்சப்படுகிறார்கள். கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போது இந்த அச்சம் மறையத் தொடங்கும்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோஸப் கூறியதுபோல், நாட்டில் உறுதியற்ற தன்மை நிலவும்போது, பொருளாதாரத்தை உந்தித்தள்ளவும், ஊக்கப்படுத்தவும் எந்தவிதமான நடவடிக்கையும் பயனளிக்காது.
மக்கள் தற்போது தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பணத்தை எடுத்து செலவு செய்கிறார்கள், மற்ற செலவுகளை ஒத்திப்போடுவதால், பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறது.
குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களைக் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், கடன் மீட்புத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. ஏறக்குறைய ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் வழங்குகிறது.
இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT