Published : 22 Sep 2015 08:03 AM
Last Updated : 22 Sep 2015 08:03 AM
‘இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா, சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். ஹெல்மெட் அணி யாமல் வாகனம் ஓட்டும் அந்த போராட்டத்துக்கு மதுரை வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி ஆகி யோர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் நீதிபதி களுக்கு எதிராக கோஷம் எழுப்பப் பட்டதையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணை யின்போது, வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்காததால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று கோரி, தலைமை நீதிபதியின் முன்பாகவே ஒருதரப்பு வழக்கறிஞர்கள், மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால், கடந்த சில நாட்களாகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையை மத்திய தொழில்படை பாதுகாப்பு (சிஐஎஸ்எப்) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த வழக்கின் விவரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கையாக தாக்கல் செய்தார். அப்போது பதிவாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்களை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அப்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜாதி அடிப்படையில் தனித்தனி குழுக்களாக செயல்படுகின்றனர். அவர்கள் நீதிமன்றங்களுக்கு உள்ளேயே ஊர்வலம் நடத்து கின்றனர். மனைவி, குழந்தை களுடன் போராட்டம் நடத்துகின் றனர். நீதிபதிகளின் அறைகளுக் குள் நுழைந்து கோஷம் எழுப்புகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை சென்னைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று வேணுகோபால் வாதிட்டார்.
சங்கங்கள் என்ன செய்கின்றன?
அப்போது தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ‘‘சென்னை உயர் நீதிமன்றம் பாரம்பரியம் மிக்க உயர் நீதிமன்றம். நாங்கள் இளம் வழக்கறிஞர்களாக இருந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளும்படி சொல்வார்கள். அத்தகைய உயர் நீதிமன்றத்தில் இப்போது என்ன நடக்கிறது? வழக்கறிஞர்களின் செயலால் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது. நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் பதற்றமான நிலை குறித்தும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விரிவாகப் பேசினேன். நீதிபதி களுக்கு எதிராகவும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராகவும் ஆபாச கோஷங்களை எழுப்புகின் றனர். சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்ளும் இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள்தானா?
நீதிபதிகளை மத்திய பாது காப்பு படையினர்தான் பாது காத்து வருகின்றனர். இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் வழக்கறி ஞர்களுக்காக உள்ள மூன்று சங்கங்களும் என்ன செய்கின்றன?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அனுப்பும் கோரிக்கைக்கு பதிலளித்த தலைமை நீதிபதி தத்து, ‘‘இப்போதைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அனுப்பினால், வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மேலும் சிறிது அவகாசம் அளிப்போம்’’ என்று பதிலளித்தார்.
நீதிபதி கர்ணன் தொடர்பான வழக்கில் அறிக்கையை பெற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தலைமை நீதிபதியுடன் சதானந்த கவுடா சந்திப்பு
மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து இச்சந்திப்பின்போது இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இப்பிரச்னை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது, ‘தமிழை வழக்காடு மொழியாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்பேரில், மத்திய சட்டத்துறை அமைச்சகம்தான் இறுதி முடிவெடுக்கும்’ என்று தலைமை நீதிபதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT