Published : 23 Jun 2020 05:15 PM
Last Updated : 23 Jun 2020 05:15 PM
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ள சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து நாளை(புதன்கி்ழமை) அறிவிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ கல்வி வாரியமும் இன்று தெரிவித்துள்ளன
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா வைரஸ் பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மே18-ம் தேதி சிபிஎஸ்இ கல்வி வாரியம் பிறப்பித்த உத்தரவின் படி " வரும் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத் தேர்வுகளும், 10-ம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சானடைசர் வழங்கப்படும், முகக்கவசம் மாணவர்கள் அணிந்து வர வேண்டும், சமூகவிலகலைப் பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும்" எனவும் சிபிஎஸ்இ வாரியம் அறிவித்திருந்தது
இந்நிலையில் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் ஏராளமானோர் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் தேர்வு தேதி அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் “ நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவல் ஜூலை மாதம் உச்சத்தில் இருக்கும் என ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் போன்ற மருத்துவ நிறுவனங்கள் எச்சரித்து இருக்கும் போது அந்த காலக்கட்டத்தில் 12-ம் வகுப்புதேர்வுகளை நடத்துவது மாணவர்ளின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.
ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை கல்வி வாரியம் முடிவு செய்ய வேண்டும். 15 ஆயிரம் தேர்வு மையங்களையும் சுத்தப்படுத்தி, மாணவர்கள் முழுமையாக சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்வு எழுத வைப்போம் என்று வாரியம் கூறுவது கண்துடைப்பாகும்.
நாட்டில் 50 சதவீதம் பேர் அறிகுறியில்லாத கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், மாணவர்கள் தேர்வு எழுத வரும்போது பாதிக்கப்பட்டால்அவர்கள் மூலம் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பு உண்டு.
ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் கரோனா வைரஸ் ஆபத்தை உணர்ந்து தேர்வை ரத்து செய்துவிட்டன. ஆதலால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் 18-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 12-ம்வகுப்பு நிலுவைத் தேர்வுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதேபோன்று மனுவும் ஐசிஎஸ்இ தேர்வு வாரியமும் தேர்வை ரத்து செய்ய தாக்கல் செய்யயப்பட்டிருந்தது. அந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஐசிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஎஸ்இ வாரியம் என்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதையே நாங்களும் பின்பற்றுவோம் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் மும்பை உயர்நீதிமன்றத்திலும் இதேபோன்ற மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் சூழலில் ஐசிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த மாநில அரசு விரும்புகிறதா அதன் திட்டம் என்று கேட்டு விளக்கம் அளிக்க மகாரஷ்டிார அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழலில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசு, சிபிஎஸ்இ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில் “ மாணவர்கள், பெற்றோர்களின் அச்சம், கவலை ஆகியவற்றை மத்திய அ ரசு உணர்கிறது.
ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ள 12-ம் வகுப்பு நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கிறோம். இந்த வழக்கை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும். இது குறி்த்து சிபிஎஸ்இ வாரியத்துடன் ஆலோசித்து 25-ம் தேதி முடிவு அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்
இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை 25-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) ஒத்தி வைத்து அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT