Published : 23 Jun 2020 07:49 AM
Last Updated : 23 Jun 2020 07:49 AM
லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அருகே கடந்த 15-ம் தேதி சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் (37) ஒருவர்.
அவரது உடல் தனி விமானம்மூலம் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டது. பின்னர், 18-ம் தேதி கோசாரம் பகுதியில் உள்ள சந்தோஷ்பாபுவின் சொந்த விவசாய நிலத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாட்டிற்காக உயிரிழந்த சந்தோஷ்பாபுவின் குடும்பத்தாருக்கு ரூ.5 கோடி நிதி உதவியுடன் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
அதன்படி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில், நேற்று மதியம், முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர் ஜெகதீஷ்வர் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் சூரியாபேட்டையில் உள்ள சந்தோஷ்பாபுவின் வீட்டிற்குசென்றனர். அங்கு அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்கூறினார். அப்போது, மனைவி சந்தோஷியிடம் ரூ.2 கோடிக்கான காசோலை, அவர்களது பிள்ளைகள் இருவருக்கும் தலா ரூ.1 கோடிமற்றும் பெற்றோருக்கு ரூ.1 கோடிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், ஹைதராபாத்தில் நில மதிப்பு அதிகமுள்ள இடமாக கருதப்படும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 711 சதுர அடியில் உள்ள வீட்டு மனைப்பட்டாவும், உதவி ஆட்சியர் பணிக்கான நியமன உத்தரவு பத்திரத்தையும் சந்தோஷ்பாபுவின் மனைவி சந்தோஷியிடம் வழங்கினார்.
சொந்த ஊரில் சிலை
தெலங்கானா அமைச்சர் ஜெகதீஷ்வர் ரெட்டி கூறும் போது“கர்னல் சந்தோஷ்பாபுவின் வீரத்தையும், அவர் நாட்டுக்காக செய்த தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், அவரது சொந்த ஊரான சூரியாபேட்டையில் அவருக்கு வெண்கsல சிலை அமைக்கப்படும். அந்த கூட்டு ரோடுக்கு சந்தோஷ்பாபு கூட்டு ரோடு எனவும் பெயர் சூட்டப்படும்” என்றார். என். மகேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT