Published : 23 Jun 2020 06:56 AM
Last Updated : 23 Jun 2020 06:56 AM
லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவினால் தகுந்த பதிலடி கொடுக்க, சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன வீரர்கள் தாக்கியதில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பின்னணியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்றுமுன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சீன வீரர்கள் அத்துமீறினால், தகுந்த பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், லடாக்கின் எல்லைப் பகுதியில் சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் திறமையாக போரிடும் வல்லமைப் படைத்தவர்கள். குறிப்பாக கொரில்லா போரில் வல்லவர்கள். உயர்ந்த மலை சிகரங்கள், பனிப்பொழிவு போன்ற எந்த சூழ்நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் போரிடக் கூடியவர்கள். மலைப் பகுதிகளில் எப்படி எல்லாம் சவால்கள் உள்ளன. அந்த பகுதிகளில் எப்படி போரிட வேண்டும் என்று பல ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், தற்போது லடாக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்கிலில் திறமை காட்டியவர்கள்
கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஊடுருவிய போது, மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள்தான் துணிச்சலுடன் போரிட்டு அந்தப் பகுதியை மீட்டனர். அந்த சம்பவமே இவர்களது திறமைக்கு சான்று.
இந்தியா - சீனா எல்லைப் பகுதி, இமயமலையின் காராகோரம் பகுதியில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவு வரை பரந்து விரிந்துள்ளது. இந்த எல்லைப் பகுதிகள் முழுவதும் மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையின் மேற்கு, மத்திய அல்லது கிழக்குப் பகுதி என எந்தப் பகுதி வழியாக சீன ராணுவ வீரர்கள் அத்துமீறினாலும் இவர்களால் பதிலடி கொடுக்க முடியும்.
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே (எல்ஏசி) கடுமையான ரோந்து பணியில் ராணுவத்தினரும் இவர்களும் உறுதுணையாக பணியில் இருப்பார்கள்.
மலை பகுதிகளில் போரிடுவது மிகவும் கடினம். இதற்கான பயிற்சியின் போது வீரர்கள் பலர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். பல ஆண்டுகள் கடினமான பயிற்சி பெற்று முழுமை பெற்ற வீரர்கள்தான் மலை பாதுகாப்பு படையில் சேர்க்கப்படுகின்றனர் என்று முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் பெருமையுடன் தெரிவித்தார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதி சமவெளியாக இருக்கும். ஆனால், இந்திய பகுதியில் காரகோரத்தில் உள்ள கே2 சிகரம் மிக உயர்ந்தது. இதுபோல் பல மாநில எல்லைப் பகுதியும் மிக உயர்ந்த மலை பகுதிகளைக் கொண்டது. எனவே, உயர்ந்த மலை பகுதிகளை ஆக்கிரமிப்பது மிகக் கடினமான செயல். மேலும், மலை பகுதிகளில் திறமையாக போரிடும் வீரர்கள் இந்திய ராணுவத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகிலேயே மலை பகுதிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியாதான். அவர்களை எதிர்கொள்வது சாதாரண விஷயமல்ல என்று சீன நிபுணர்களே சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT