Published : 23 Jun 2020 06:53 AM
Last Updated : 23 Jun 2020 06:53 AM
சமீபத்தில் ட்விட்டர் நடத்திய சர்வேயில் ‘சுத்தமான’ புரோமோட்டர் என்று அடையாளம் காணப்பட்டார் டாடா குழுத்தின் தலைவர் ரத்தன் டாடா. தற்போது ஆன்லைனில்வெளிப்படும் வெறுப்பு, அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருப்பதன் மூலம் பல கோடி சமூக வலைதள பயனாளர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்.
இந்த ஆண்டு அனைவருக்குமே மிக சவாலான ஆண்டாக உள்ளது. கரோனா ஊரடங்கால் எல்லோரும்வீடுகளிலேயே அடைந்துகிடைக்கிறோம். பல ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் கூட சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை வெளிப்படுத்துவதும் அச்சுறுத்தல் கொடுப்பதும் வேதனை அளிக்கிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் எல்லோரும் ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்க வேண்டுமே தவிர ஒருவருக்கு ஒருவர் வெறுப்பை வெளிப்படுத்தக் கூடாது. நான் சமூக வலைதளங்களில் குறைவானநேரங்களே இருக்கிறேன். ஆனால்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது சமூக வலைதளங்கள் வெறுப்பையும் அச்சுறுத்தலையும் தரும் இடமாக இல்லாமல் ஒருவொருக்கு ஒருவர் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்துகொள்ளும் இடமாக மாற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பணக்காரர்கள், பிரபலங்கள் பொதுவாகப் பொதுப் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பார்கள். வெகுசிலரே அவ்வப்போது பொதுப் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்கிறார்கள். அந்த வகையில் ரத்தன் டாடா ஆன்லைன் வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலை கண்டித்து பதிவை வெளியிட்டிருப்பது அவருடைய குணத்தை காட்டுகிறது என்றும் சமூகத்தின் மீது அவருக்குள்ள பொறுப்புணர்வைக் காட்டுகிறது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
ரத்தன் டாடாவின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு காரணம் அவர் பேசுவதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு வாழ்ந்து காட்டும் உதாரணமாகவும் இருந்திருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு பெண் ‘குழந்தை’ என்று குறிப்பிட்டதற்கு அந்தப் பெண்ணை அனைவரும் கடுமையான வார்த்தைகளால் ட்ரோல் செய்து விமர்சித்தனர். ஆனால், ரத்தன் டாடா எல்லோருக்குள்ளும் குழந்தைத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பெண்ணை மரியாதையுடன் நடத்துங்கள் என்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT