Published : 22 Jun 2020 05:24 PM
Last Updated : 22 Jun 2020 05:24 PM
கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றமடைந்ததை தொடர்ந்து செயற்கை சுவாச கருவி நீக்கப்பட்டு பொது வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
55 வயதான ஜெய்னுக்கு உடனே கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிய போது முடிவு நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் பின்னர் அவருக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரது நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் அவரது உடல்நிலை நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சுவாச கருவியின் துணையின்றி சுவாசிக்கும் அளவுக்கு அவர் உடல்நலம் மேம்பட்டுள்ளது. நுரையீரலில் இருந்து சளி அடைப்பும் பெருமளவு குறைந்துள்ளது.
இதனையடுத்து இன்று மாலை அவருக்கு செயற்கை சுவாச கருவி கழற்றப்பட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். அவர் நன்கு தேறி வருவதாகவும் ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT