Published : 22 Jun 2020 09:38 AM
Last Updated : 22 Jun 2020 09:38 AM
35 நாடுகளில் இருந்து வந்து டெல்லி தப்லீக் ஜமாத் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்ற 3,500-க்கும் மேற்பட்டவர்களை கறுப்புப்பட்டியலில் வைத்து அவர்கள் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் வரத் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
4-க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் தாய்லாந்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவரும், மத்திய அரசு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ஜூன் 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் மார்ச் மாதத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மார்ச் மாதம் ஒன்றாகக் கூடியிருந்தனர்
மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த 3500-க்கும் மேலான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இவர்களில் 960 பேருக்கு இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதித்து கடந்த ஏப்ரல் 2-ம் தேதியும், 2,500க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதித்து கடந்த 4-ம் தேதியும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இன்னும் பலர் தங்கள்சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு தனிமை முகாம்களிலும், மசூதிகளிலும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3500 பேர் இந்தியாவுக்குள் நுழையத் தடைவிதித்து பிறப்பித்த உத்தரவை எதி்ர்த்து ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
இதில் தாய்லாந்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணிப்பெண் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது “ தப்லீக் ஜமாத் உறுப்பினர்களிடம் எந்த விதமான விளக்கமும் கேட்காமல், அவர்களுக்கு எந்தவிதமான அறிவிக்கையும், முன்னெச்சரிக்கை நோட்டீஸும் அனுப்பாமல் அவர்கள் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதித்த இந்திய அரசின் உத்தரவு கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய முடிவு.
இயற்கை நீதிக்கு எதிரானது, தன்னிச்சையானது. இதன் மூலம் வெளிநாட்டினரின் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற உரிமையைப் பறித்து அவர்களை சொந்த நாட்டுக்கே அனுப்பிவைக்கும் செயலாகும். தான் தற்போது 7 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறேன், தனிமை முகாமில் அடைத்து வைக்கப்பட்டு மே மாதம்தான் வெளியே வந்துள்ளேன்.
நான் என்னுடைய சொந்த நாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கிறது, இந்தியாவில் நான் பல்வேறு வசதிகளைப் பெறுவதிலும் சிரமமும் கட்டுப்பாடுகளும் இருக்கிறது.
இந்தியாவுக்குச் செல்ல முறையான, சட்டபூர்வ விசா இருந்தும், இந்தியாவில் நடக்கும் எந்தவிதமான மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்க தடை இல்லை, வழிபாட்டுத் தலத்துக்கும் செல்லத் தடையில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எனக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் தடையை நீக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இதேபோல 6-க்கும் மேற்பட்டோர் ரிட்மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, வெளிநாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர்குக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரியுள்ளனர். வழக்கறிஞர் புஜையல் அகமது அயூப் மூலம் வழக்கறிஞர்கள் இபாத் முஸ்தாக், ஆஷிமா மந்தலா ஆகியோர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “ 35 நாடுகளளைச் சேர்ந்த 3,500 தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 10 ஆண்டுகள் நுழையத் தடைவிதித்துள்ள மத்திய அரசின் உத்தரவால் இந்தியாவில் இருக்கும் அவர்கள் எந்த வாய்ப்பும் இன்றி தவிக்கிறார்ள். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு21 வழங்கிய உரிமைக்கு எதிரானது.
திடீரென தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்ததும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததும், பாஸ்போர்ட்டை செல்லாததாக்குவதும், அவர்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் சட்டவிரோதமாக செயல்படவில்லை, எந்த குற்றத்தையும் செய்யவில்லை, ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
அவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை, விளக்கம் அளிக்க அவகாசமும் மத்திய அரசு அளிக்கவில்லை. இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு21-க்கு விரோதமாகும். ஆதலால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 3,500 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கான தடையை மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நீக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT