Last Updated : 22 Jun, 2020 08:47 AM

1  

Published : 22 Jun 2020 08:47 AM
Last Updated : 22 Jun 2020 08:47 AM

ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நடக்குமா? தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கோப்புப்படம்

புதுடெல்லி

உலகப்புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடத்துவதற்கு தடைவிதித்து பிறப்பித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் ெசய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ரவிந்திர பாட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.

அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா (நாளை) 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.

ஆனால் ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிஷத் எனும் அமைப்பு கரோனா பரவும் நேரத்தில் இந்த திருவிழாவை நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு மேலும் கரோனா பரவல் தீவிரமாகும் ஆதலால் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த மனுவை கடந்த 18-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை நடத்த தடை விதித்தனர். " கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு இந்த ஆண்டு நாங்கள் தேரோட்டத்தை நடக்க அனுமதித்தால் பூரி ஜெகந்நாதர் எங்களை மன்னிக்கமாட்டார்” என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து தடை விதித்தார்.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து “ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ்” எனும் அமைப்பும், அப்தாப் ஹூசைன் என்பவரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்து, இந்த தேரோட்டைத்தை நடத்த அனுமதிக்க வேண்டும், முந்தைய தடை உத்தரவை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

"ஜெகந்நாத் சன்ஸ்குருதி ஜனா ஜகரனா மான்ஞ்" எனும் அமைப்பு தாக்கல் செய்த மனுவில் “ ஜெகந்நாதர் கோயில் திருவிழா, தேரோட்டம் என்பது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. இதில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளபடி சமூக விலகலைக் கடைபிடித்து தேரோட்டத்தை நடத்துவது என்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 500 பேர்வரை பங்கேற்பார்கள்.

இந்த தேரைச் செய்வதற்காக 372 பேர் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டு தேர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது.

ஆதலால், மத்திய அரசின் வழிகாட்டல்படி, சில கட்டுப்பாடுகளுடன் 500 பேர் முதல் 600 பேர் வரை பங்கேற்று ரத யாத்திரையை நடத்த அனுமதிக்க வேண்டும். பூரி நகர் முழுவதும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் நடக்கும் போது அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடவும் போலீஸார் தயாராக இருக்கிறார்கள். ஆதலால், தடை உத்தரவை நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் அப்தாப் ஹூசைன் தாக்கல் செய்த மனுவில் “ பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் ஒரு ஆண்டு நடக்காவிட்டால் அடுத்த 12 ஆண்டுகளுக்குநடத்த முடியாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு ஏற்பட்டால் மக்கள் மத்தியில் பெரிய மனக்குழப்பத்தையும், அழுதத்தையும் ஏற்படுத்தும். ஆதலால், தடை உத்தரவை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x