Published : 22 Jun 2020 08:11 AM
Last Updated : 22 Jun 2020 08:11 AM
டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் உச்ச பட்ச உஷார் நிலையில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர்.
டெல்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 4 முதல் 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதால், டெல்லி பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று உளவுத்துறையினர் டெல்லி போலீஸின் குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
இதனால் டெல்லியில் உள்ள 15 மாவட்ட போலீஸாரும் நேற்று இரவிலிருந்து பாதுகாப்பையும், வாகனங்கள் தணிக்கையையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக டெல்லியின் எல்லைகள் சிறப்பு அதிரடிப்படைகள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பேருந்து, டாக்ஸி மற்றும் கார் மூலம் சாலை வழியாகவே தீவிரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதால் எல்லைப்பகுதிகளில் உச்ச பட்ச கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறிச்சந்தைப் பகுதி, மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு ஏராளமான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதால், நோயாளிகள் வேடத்தில் தீவிரவாதிகள் சென்றுவிடக்கூடாது எனும் நோக்கில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லியில் வரும் காஷ்மீர் பதிவு எண் கொண்ட வாகனங்கள், கார்களை போலீஸார் தீவிரமாக சோதனை செய்தபின்பே அனுமதிக்கின்றனர். டெல்லியில் உள்ள தங்கும்விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள், விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் நேற்று இரவிலிருந்து போலீஸார் கண்காணித்தும், சோதனை செய்தும் வருகின்றனர்.
குறிப்பாத டெல்லியின் வடக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்த எச்சரிக்கை இருப்பதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-சீனா ராணுவப்படைகளுக்கு இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலால் உண்டான பதற்றத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தலைநகர் டெல்லியில் தாக்குதலைத் நடத்தி திசை திருப்ப தி்ட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT