Published : 21 Jun 2020 01:12 PM
Last Updated : 21 Jun 2020 01:12 PM
யோகா பயிற்சி செய்பவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
6-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருளாக “இல்லத்தில் யோகா செய்வோம், குடும்பத்தோடு யோகா செய்வோம்” என்பதாகும்.
பிரதமர் மோடி யோகாவை சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் 2014-ம் ஆண்டு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஐ.நா. அதிகாரபூர்வமாக ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதனால் தொடர்ந்து 6-வது ஆண்டாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்றைய நாளை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுகின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கெனவே சர்வதேச யோகா தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், “இந்தியக் கலாச்சாரத்துக்கும், மனித சமூகத்துக்கும் தனிச்சிறப்பான பரிசு யோகா. பிரதமர் மோடியின் அயராத முயற்சிகளின் காரணாக இன்று உலகம் யோகா கலையை ஏற்றுக்கொண்டுள்ளது. உலக நாடுகள் யோகா கலையை ஏற்று யோகா தினத்தைக் கடைப்பிடிக்கின்றன” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக், கோவாவில் இருந்து எம்.பி.யாகத் தேர்வானவர். கோவா தலைநகர் பனாஜி அருகே இருக்கும் தனது சொந்த ஊரான ராபந்தர் கிராமத்தில் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் மக்களுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்தார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட யோகா உதவி புரியும் என்பதை நாடு முழுவதும், உலகம் முழுவதும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பிரச்சாரம் செய்யும்.
இந்தப் பிரச்சாரம் நிச்சயம் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகப்பெரிய அளவில் சிறப்பாகச் செயல்படத் துணை புரியும். யோகா கலையை யாரெல்லாம் பயிற்சி செய்து வருகிறார்களோ அவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவாகும்.
லடாக்கின் உயரமான லே பனிமலையில் இன்று யோகா பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாகவும், சமூக விலகல் தொடர்பாகவும் அது ரத்து செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே யோகா பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை ஏற்று மக்கள் அனைவரும் வீடுகளில் யோகா செய்து, யோகா தினத்துக்கு நல்ல வரவேற்பு அளித்துள்ளார்கள்.
பொது இடங்களில் மக்கள் யோகா செய்தால், 20 பேருக்கு மேல் கூடி யோகா செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். யோகா கலையைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நுரையீரல், சுவாசக் குழாய் வலுவடையும். குறிப்பாக நுரையீரலைப் பாதிக்கும் கரோனா வைரஸை எதிர்க்க யோகா மிகவும் பயன்படும்” என்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT