Last Updated : 21 Jun, 2020 12:08 PM

2  

Published : 21 Jun 2020 12:08 PM
Last Updated : 21 Jun 2020 12:08 PM

மாநிலங்களவையில் காங்கிரஸைவிட ஒரு மடங்கு அதிகரிக்கும் பாஜகவின் பலம்: முதல் முறையாக 100 எண்ணிக்கையைக் கடக்கிறது 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்

புதுடெல்லி

மாநிலங்களவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம், காங்கிரஸை விட ஒரு மடங்கு உயர்ந்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றிக் கணக்கிட்டால் காங்கிரஸுக்கு 41 எம்.பி.க்கள், பாஜகவுக்கு 86 எம்.பி.க்கள் பலம் மாநிலங்களவையில் இருக்கிறது.

இதனால் வரும் காலங்களில் மாநிலங்களவையிலும் எந்த மசோதாவையும் நிறைவேற்றுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கப்போவதில்லை.

மக்களவையில் ஏற்கெனவே மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இருக்கிறது. இப்போது மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 101 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் உள்ளனர். 245 எம்.பி.க்கள் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு 123 எம்.பி.க்கள் தேவை.

அந்த வகையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (6 எம்.பி.க்கள்), ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் (9 எம்.பி.க்கள்), அதிமுக (9 எம்.பி.க்கள்) ஆகியோர் ஆதரித்தாலே எந்த மசோதாவையும் நிறைவேற்றிட முடியும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 65 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.

மாநிலங்களவையில் காலியாகிய 55 இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 55 இடங்களில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நேற்று முன்தினம் 8 மாநிலங்களில் நடத்தப்பட்டது.

ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்கள், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்டில் 2 இடங்கள், மணிப்பூர், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் 19 இடங்களில் 8 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 4 இடங்களைப் பிடித்தன. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வென்றன.

ஒட்டுமொத்தமாக 55 இடங்களில் இதுவரை, பாஜக 17 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 9 இடங்கள், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், திமுக, அதிமுக ஆகியவை தலா 3 இடங்கள், பிஜூ ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை தலா 4 இடங்கள், என்சிபி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், டிஆர்எஸ் ஆகியவை தலா 2 இடங்கள், மற்ற கட்சிகள் மற்ற இடங்களைப் பிடித்துள்ளன என்று மாநிலங்களவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரும் காலங்களில் பாஜக தலைமையிலான அரசு எந்த மசோதாவையும் அசுர பலத்துடன் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்தக் கட்சிக்கு எம்.பி.க்கள் அடிப்படையில் மக்களவையில் எந்தவிதமான சிரமமும் இல்லை. இப்போது மாநிலங்களவையிலும் அதற்கான அனைத்துத் தடைகளும் அகன்றுள்ளன. முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x