Published : 21 Jun 2020 11:10 AM
Last Updated : 21 Jun 2020 11:10 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து 15-வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 பைசா, டீசல் விலை லிட்டருக்கு 60 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 15 நாட்களில் பெட்ரோலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.97 பைசா உயர்ந்துள்ளது. டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.8.88 பைசா விலை உயர்ந்துள்ளது
டெல்லியில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.88 பைசாவிலிருந்து ரூ.79.23 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.77.67 பைசாவிலிருந்து ரூ.78.27 பைசாவாக அதிகரித்துள்ளது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.82.58 பைாசவாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.75.80 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.86.04 பைசாவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.76.69 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை.
ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் சுமையை மக்கள் மீது தொடர்ந்து 15-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றி வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மூன்றில் இருபங்கு வரி இடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் உற்பத்தி, விற்பனை வரி அல்லது வாட் வரி போன்றவைதான் விலை உயர்வில் 60 சதவீதம் இடம் பெற்றுள்ளன.
பெட்ரோல் விலையில் 63 சதவீதம் அதாவது ரூ.50.69 பைசா வரியாகச் செலுத்துகிறோம். இதில் ரூ.32.98 மத்திய அரசுக்கு உற்பத்தி வரியாகவும், ரூ.17.71 பைசா மாநில அரசுகளுக்கு வாட் வரியாகவும் செலுத்துகிறோம்
டீசலில் ஒரு லிட்டர் விலையில் ரூ.49.433 பைசா அல்லது 63 சதவீதம் வரியாக மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதில் உற்பத்தி வரியாக ரூ.32.98 பைசாவும், வாட் வரியாக ரூ.17.71 பைசாவும் இடம் பிடிக்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான வரியைக் கழித்துவிட்டு மக்களுக்கு விற்பனைக்கு செய்தால் அதன் அடக்கவிலை லிட்டர் 25 ரூபாய்க்குள்ளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி இதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உச்சத்துக்குச் சென்றது. அப்போது டெல்லியில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.75.69 பைசாவாக அதிகரித்தது. அதற்கு முன் அந்த மாதத்தில் 4-ம் தேதி ஒரு நாள் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.84க்கு விற்பனையானது.
அதன்பின் எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.1.50 பைசா குறைத்தது. மாநில அரசுகளையும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைக்க வலியுறுத்தியதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்தது.
ஆனால், சிறிதுகாலத்திலேயே அதாவது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையில் உற்பத்தி வரி 2 ரூபாயை மத்திய அரசு உயர்த்திக்கொண்டது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இருமுறை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது உற்பத்தி வரியை உயர்த்தியுள்ளது. மார்ச் 14-ம் தேதி உற்பத்தி வரி 3 ரூபாயும், மே 5-ம் தேதி பெட்ரோல் மீது லிட்டர் 10 ரூபாயும், டீசல் மீது லிட்டர் 13 ரூபாயும் உயர்த்தியது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT