Published : 21 Jun 2020 08:24 AM
Last Updated : 21 Jun 2020 08:24 AM
கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் பிராணயாம மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாசக்குழாய், நுரையீரல் ஆகியவை பலப்படும் என்று சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தினார்.
6-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருளாக “இல்லத்தில் யோகா செய்வோம், குடும்பத்தோடு யோகா செய்வோம்” என்பதாகும்.
பிரதமர் மோடி யோகாவை சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் 2014-ம் ஆண்டு கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஐ.நா., அதிகாரபூர்வமாக ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதனால் தொடர்ந்து 6-வது ஆண்டாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்றைய நாளை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுகின்றனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் சர்வதேச யோகா தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த நாள் ஒற்றுமைக்கும், சர்வதேச சகோதரத்துவத்துக்கும் உகந்த நாள். இனம், வண்ணம், பாலினம், நம்பிக்கை, தேசம் ஆகியவற்றால் யாரையும் வேறுபடுத்தாமல் யோகா ஒற்றுமையின் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கும்போது, யோகாவின் அவசியத்தை உலகம் உணர்கிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால்தான் எந்த நோயையும் எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடிக்க முடியும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த யோகாவில் பல்வேறு விதமான நுட்பங்கள் இருக்கின்றன. பல்வேறுவகையான ஆசனங்கள் இருக்கின்றன.
கரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரல் சுவாசப் பகுதியைத்தான் பாதிக்கிறது. கரோனாவிலிருந்து மனிதர்கள் தற்காத்துக்கொள்ள நுரையீரலையும், சுவாசப்பகுதியையும் பலப்படுத்தும் பிராணயாம மூச்சுப் பயிற்சியைப் பழக வேண்டும். இது சுவாசப் பகுதியைப் பலப்படுத்தும்.
ஆரோக்கியமான பூமியை நாம் உருவாக்க வேண்டும் என்ற மனிதர்களின் தேடலை யோகாதான் நிறைவேற்றும். மனிதநேயத்தை ஆழமாகப் பிணைத்து, ஒற்றுமையின் சக்தியாகவும் யோகா உருவெடுத்திருக்கிறது. யோகா யாரையும் வேறுபடுத்தாது. யார் வேண்டுமானாலும் யோகாவைப் பயிலலாம்.
நம்முடைய ஆரோக்கியத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள முடிந்தால், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான மனிதகுலத்தின் வெற்றியை உலகம் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதை நிறைவேற்ற யோகா உறுதியாக நமக்கு உதவி புரியும். நம்முடைய பணியைச் செய்வதும், கடமையைச் செய்வதும் யோகாதான்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT