Published : 20 Jun 2020 08:56 PM
Last Updated : 20 Jun 2020 08:56 PM
கேரளாவில் இன்று மிக அதிகமாக 127 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை அன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
’’கேரளாவில் இன்று மிக அதிகமாக 127 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் நமது மாநிலத்தில் மிக அதிகமான பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 118 பேருக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இன்று 57 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 36 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர் ஒருவருக்கும் இன்று நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப் பட்டவர்களில் 15 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், 9 பேர் டெல்லியில் இருந்தும், 5 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், தலா 2 பேர் உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், தலா ஒருவர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 24 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 23 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 17 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 12 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 11 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 6 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் மலப்புரம், வயநாடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் கண்ணூர் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று 57 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் தலா 12 பேர் பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 11 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 10 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 2 பேர் வயநாடு, கண்ணூர், காசர்கோடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று 4,817 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை கேரளாவில் 3,039 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,450 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,39, 342 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,036 பேர் மருத்துவமனையில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 288 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 1,78 559 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் இன்னும் 3,293 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 37,136 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 35,712 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.
கேரளாவில் தற்போது 111 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. திருவனந்தபுரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு சட்டத்தில் சில நிபந்தனைகளை தளர்த்திய போது சந்தைகள், கடைகள் உட்பட பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
பொது இடங்களில் பொதுமக்கள் சமூக அகலத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சில கடைகளில் இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார் வந்துள்ளது. நிபந்தனைகளை மீறினால் அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இது தொடர்பாகப் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்கள் உள்பட பொது இடங்களில் பொதுமக்கள் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கின்றார்களா என்பதைக் கண்காணிக்க போலீசாருக்கு 3 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன’’.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT