Published : 20 Jun 2020 03:43 PM
Last Updated : 20 Jun 2020 03:43 PM

சீனா அத்துமீறல் விவகாரம்; அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பேசியது என்ன? - பிரதமர் அலுவலகம் விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக, திமுக உட்பட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது எந்த ஒரு
நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.

நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைககளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளை பாதுகாக்க, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதே போன்று நமது ஆயுதப்படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் என முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு மோடி பேசினார்.

இதுகுறித்து ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உட்பட காங்கிரஸார் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறுவது உண்மை என்றால், இருநாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன், இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் ‘‘எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சிலர் தவறான தகவல்களை கூறுகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உள்ளே முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x