Published : 20 Jun 2020 10:10 AM
Last Updated : 20 Jun 2020 10:10 AM
சீனாவுடனான மோதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானது குறித்து பிரதமர் மோடி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதித்தா,ர் அதில் சீன துருப்புகள் இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்களில் எழுப்பிய கேள்விகள் வருமாறு.
அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் போது கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை?
இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?
ஊஹான் மற்றும் மகாபலிபுரத்தில் நெருங்கிய நட்பு மலர்ந்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டீர்களே, சீன அதிபர் ஜீ தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இப்பொழுது உணர்கிறீர்களா?
“கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம்” என்று சீனா அந்தப் பகுதியில் காலூன்றி விட்டதே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
இருபது ஜவான்கள் மரணம், 85 பேர் காயம், 10 பேர் சிறைபிடிப்பு, இதற்குப் பிறகு தான் தங்கள் மௌனம் கலைந்தது, இது ஜனநாயக முறைக்கு உகந்ததா?
ஏழு வாரங்கள் தாங்கள் (பிரதமர்) மௌனம் காத்தீர்கள், ஏன்? ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற மௌனம் நியாயமா?
மே மாதம் 5ஆம் தேதியே பிரதமருக்கு ஊடுருவல் பற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் நண்பர் சீன அதிபர் திரு ஜீ யைத் தொடர்பு கொண்டீர்களா?
சீன ஊடுருவல் பற்றி இந்திய மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது தெரிவிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தீர்களா?
இவ்வாறு அடுக்கடுக்காக பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT