Published : 19 Jun 2020 07:05 AM
Last Updated : 19 Jun 2020 07:05 AM
இந்தியா-சீனா எல்லையில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்குஇடையே நடந்த மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்தியா - சீனா எல்லையில் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இரு தரப்பு ராணுவவீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் தெலங்கானா மாநிலம், சூரியாபேட்டையைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் (37) உயிரிழந்தார்.
அவரது உடல் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஹைதராபாத் வந்தது. விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் மற்றும் அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சந்தோஷ் பாபுவின் உடல் காரில் அவரது சொந்த ஊரானசூரியாபேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைக் கண்டஅவரது மனைவி சந்தோஷி, குழந்தைகள், பெற்றோர், உறவினர், நண்பர்கள் கதறி அழுதனர். பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, நேற்று காலையில் சந்தோஷ் பாபுவின் உடலுக்குமாநில அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி,ராணுவ உயர் அதிகாரிகள், மாவட்டஆட்சியர் வினய் கிருஷ்ணா ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் ராணுவ வாகனத்தில் சந்தோஷ் பாபுவின் உடல் ஏற்றப்பட்டது. அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள அவரது விவசாய நிலத்தில் உடல் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்டது.
அப்போது வழி நெடுகிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பொதுமக்கள் சந்தோஷ்பாபுவின் உடலுக்கு ’சல்யூட்’ அடித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் ராணுவ வாகனத்துடனேயே 8 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றனர். பின்னர் கேசாரம் பகுதியில் உள்ள விவசாயநிலத்தில் சந்தோஷின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி அஞ்சலியையொட்டி, சூரியாபேட்டை முழுவதும் நேற்று தன்னிச்சையாக கடையடைப்பு செய்யப்பட்டது. நகர் முழுவதும்கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் காணப்பட்டன. பல இடங்களில் சந்தோஷ் பாபுவின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கரோனா பாதிப்பு
கர்னல் சந்தோஷ் பாபு, கடந்த2 மாதங்களுக்கு முன்பே ஹைதராபாத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சந்தோஷ் பாபு லாடாக்கில் இருந்துஹைதராபாத் செல்ல இயலவில்லை. அதனால் அவர் லடாக்கிலேயே பணியாற்ற நேர்ந்தது. இறுதியில் சீன வீரர்களின் மோதலில் வீரமரணம் அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...