Published : 18 Jun 2020 09:25 PM
Last Updated : 18 Jun 2020 09:25 PM
மணிப்பூரில் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
மணிப்பூர் சட்டப்பேரவை 60 எம்எல்ஏக்களைக் கொண்டது. தற்போது அங்கு 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஷியாம்குமார் சிங் 2017-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாஜகவுடன் சேர்ந்ததால் அவர் தகுதி நீக்கப்பட்டார்.
தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 21 இடங்களும் கிடைத்தன. இதில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டு, தேசிய மக்கள் கட்சிக்கு (என்பிபி) 4 எம்எல்ஏக்களும், நாகா மக்கள் முன்னணி (என்பிஎப்) கட்சிக்கு 4 எம்எல்ஏக்களும் கிடைத்தனர். லோக் ஜன சக்தி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சியைச் சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
இதற்கிடையே காங்கிரஸிலிருந்து 7 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த எம்எல்ஏக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் இருக்கிறது. இந்த 7 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த 7 எம்எல்ஏக்களும் எந்தவிதமான தீர்மானத்திலும் வாக்களிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குச் சட்டப்பேரவைக்குள் செல்லவும் இந்த 7 எம்எல்ஏக்களுக்கு கடந்த வாரம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) 4 எம்எல்ஏக்கள், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏ ஆகிய 6 பேர் பாஜக கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென நேற்று வாபஸ் பெற்றனர்.
மேலும், பாஜகவின் சொந்த எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று திடீரென ராஜினாமா செய்து அவர்கள் காங்கிரஸ் பக்கம் இணையப்போவதாக அறிவித்தனர்.
இதனால் திடீரென 9 எம்எல்ஏக்கள் ஆதரவை முதல்வர் பைரேன் சிங் ஆட்சி இழந்துவிட்டால், பெரும்பான்மையை இழந்து ஆட்சி ஊசலாட்டத்தில் இருக்கிறது.
இதனையடுத்து, சுயேட்சைகளின் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த புதிய கூட்டணிக்கு திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி கட்சிகளின் சார்பில் தலைவராக முன்னாள் முதல்வர் இபோதி சிங், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேலும் சட்டப்பேரவையை சபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT