Published : 18 Jun 2020 04:43 PM
Last Updated : 18 Jun 2020 04:43 PM
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது பிஐஎஸ் தரக் கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடைப்பிடிக்க இருக்கிறது. மக்கள் சீனப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்தியா, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடுமையான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் வீரர்கள் காயம் குறித்தோ உயிரிழப்பு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
சீனாவின் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்ச்சைக்குரிய பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுவதும் ஏற்புடையதல்ல என்று இந்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாட்டு ராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தரப்பில் பேசித் தீர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனால் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் சீனாவுக்கு எதிராகவும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் முன்பு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நேற்று போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக சங்கங்கள், அமைப்புகள் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுதத்துள்ளன. சமூக வலைதளங்களிலும் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதற்கான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்தச் சூழலில் மத்திய அமைச்சர ராம்தாஸ் அத்வாலே இன்று அளித்த பேட்டியில், மக்கள் சைனீஸ் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை விரிவுபடுத்தும் திட்டத்துக்குத் தேவையான தொலைத்தொடர்பு உபகரணங்கள், தொழில்நுட்பத்தை சீனாவிடம் இருந்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர்-மெகுல்சாரி இடையிலான 417 கி.மீ. ரயில்வே பாதையில் சிக்னல் அமைக்கும் ரூ.400 கோடிக்கும் அதிகமான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை ரத்து செய்யவும் மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
சீனாவுக்கும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தச் சூழலில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், சீனப் பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் அனைவரும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட அன்றாடம் அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களைப் பயன்படுத்துவதை எங்கள் அமைச்சகத்தில் இருக்கும் அதிகாரிகள் கூட தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சீனா நடந்துகொள்ளும் முறையால் ஒவ்வொருவரும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். அனைத்துப் பொருட்களையும் ஒதுக்கவேண்டும். சீனாவிலிருந்து சட்டவிரோதமாக தரமற்ற பல பொருட்கள் இறக்குமதியாகின்றன. குறிப்பாக பர்னிச்சர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வருகின்றன. மத்திய அரசு இனிமேல் தீவிரமாக பிஐஎஸ் தர விதிகளை சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்போகிறது.
பிஐஎஸ் சட்டத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான விதி என 25 ஆயிரம் விதிகள் இருக்கின்றன. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சீனா சென்றவுடன் அங்கு பரிசோதிக்கப்படுகிறது. நம்முடைய பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தால் தரமில்லை எனத் திருப்பி அனுப்புகிறார்கள்.
ஆனால், அவர்கள் பொருட்கள் இந்தியா வருகின்றன. இங்கு எந்தவிதமான தரக்கட்டுப்பாடு விதிகளும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இனிமேல் இறக்குமதியாகும் பொருட்களில் பிஐஎஸ் தர விதி தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT