Published : 18 Jun 2020 04:03 PM
Last Updated : 18 Jun 2020 04:03 PM

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்; விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்: இந்திய வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுடெல்லி

லடாக் மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் சீனப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும் என அகில இந்திய வர்த்தர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலை சீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும்போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அகில இந்திய வர்த்தர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் கூட்டமைப்பில் நாடு முழுவதும் 7 கோடி வர்த்தகர்களும், 40 ஆயிரம் வர்த்தக அமைப்புகளும் இணைந்துள்ளன. எங்கள் கூட்டமைப்பின் சார்பில் சீனப் பொருட்கள் எவை என்ற விவரத்தை வெளியிட்டுள்ளோம். சீனப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதுபோலவே சீனப் பொருட்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், தோனி, டெண்டுல்கர் உள்ளிட்டோர் சீனப் பொருட்களுக்கு விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும். இந்தியனாக இருப்போம். இந்தியப் பொருட்களை வாங்குவோம் என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x