Published : 31 Mar 2014 11:45 AM
Last Updated : 31 Mar 2014 11:45 AM
பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில், பூமியா மாவட்டத்தில் உள்ளது ஜியாகச்சி என்ற கிராமம். பூர்னியா மாவட்டத்தில் இருந்தாலும் இந்த கிராமம் கிஷான்கஞ்ச் மக்க ளவை தொகுதியின் கீழ் வருகிறது.
இந்நிலையில் ஜியாகச்சி கிராமத்தில் 55 ஆண்கள், 30 பெண்கள், 35 குழந்தைகள் என மொத்தம் 120 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். பிஹார் கூட்டுக் குடும்பங்களில் இதுவே மிகப் பெரியதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இக்குடும்பத்தில் 47 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் அனைத்துக் கட்சியினரும் இக்குடும்பத்தின் மீது கண் வைத்துள்ளனர். தலை வர்கள், தொண்டர்கள் என பலரும் இக்குடும்பத்தைச் சுற்றிச்சுற்றி வருகின்றனர்.
குடும்பத்தின் தலைவரான முகமது நாசிர் கூறுகையில், “வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் குடும்பத்தில் 47 பேர் வாக்களிக்கப் போகிறோம். இதனால் எங்கள் குடும்பத்தின் முக்கியத்துவம் இப்போது அதிகரித்து விட்டது. எங்கள் குடும்பம் 10க்கும் மேற்பட்ட சிறு குடும்பங்களுக்கு இணையானது. இதனால் எல்லா கட்சித் தலைவர்களும் எங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்” என்றார்.
குடும்பத் தலைவர் நாசிர் சுமார் 60 வயதுடையவர். இவர் ஒரு விவசாயி. இவரது கூட்டுக் குடும்பத்துக்கு சொந்தமாக 20 பிகா விவசாய நிலம் உள்ளது. நாசிரின் இளைய சகோதரர்கள் இருவர் பள்ளி ஆசிரியர்கள். இவர்கள் தங்கள் மாத ஊதியத்தை குடும்பத்தை நிர்வகிக்க நாசிரிடம் கொடுத்து வருகின்றனர்.
நாசிரின் சகோதரர் முகமது அஷ்பக்கின் மனைவி அஞ்செரா கதூன் தான் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர்.
வாழ்க்கையில் முன்னேற கல்வி முக்கியம் என்பதால் எங்கள் குடும்பத்தில் எல்லா குழந்தைகளையும் படிக்கவைத்து வருகிறோம் என்கிறார் அஞ்செரா.
“நான் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் எங்கள் குடும்பத்தின் தலைவர், எனது கணவரின் மூத்த சகோதரர் நாசிர்தான். யாருக்கும் எந்த மன வருத்தமும் வராத அளவுக்கு அவர்தான் குடும்பத்தை நிர்வாகம் செய்கிறார். குடும்பத்தில் அவர் எடுப்பதுதான் இறுதி முடிவு” என்கிறார் அஞ்செரா.
இப்பகுதி போலீஸ் அதிகாரி மகேந்திர பிரசாத் யாதவ் கூறுகை யில், “இந்த கிராமத்தில் பல்வேறு பிரச்சினைகள், தகராறுகளை தீர்த்து வைப்பதற்கு நாசிரின் குடும்பம் எங்களுக்கு உதவியுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT