Published : 18 Jun 2020 06:56 AM
Last Updated : 18 Jun 2020 06:56 AM
லடாக் எல்லையில் சீன ராணுவம் அமைத்திருந்த கூடாரமே இருதரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த கூடாரத்தை இந்திய ராணுவ வீரர்கள் அகற்றிய போது இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ளது.
கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி எல்லையில் இருந்து சீனப் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வந்தன. ஆனால் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் சந்தோஷ் பாபு, இந்திய எல்லைக்கு உட்பட்ட 'பி 14' பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதை கண்டறிந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது கூடாரத்தை அகற்ற சீன ராணுவம் ஒப்புக் கொண்டிருந்தது.
கடந்த 15-ம் தேதி மாலையில் சம்பவ பகுதிக்கு துணிச்சலாக சென்ற கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, ஜார்கண்டை சேர்ந்த வீரர் குண்டன் ஓஜா ஆகியோர் அந்த கூடாரத்தை அகற்ற கோரினர். இந்திய ராணுவ படை சற்று தொலைவில் முகாமிட்டிருந்தது.
அப்போது கூடாரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த சீன வீரர்கள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் கர்னல் சந்தோஷ் பாபுவையும் 2 இந்திய வீரர்களையும் கடுமையாக தாக்கினர். எல்லை ஒப்பந்த நடைமுறைகளின்படி இந்திய வீரர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. பெரும் எண்ணிக்கையில் திரண்ட சீன வீரர்களை, 3 பேரால் சமாளிக்க முடியவில்லை. இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 3 பேரும் உயிரிழந்தனர்.
சற்று தொலைவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், சக வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து ஆவேசம் அடைந்தனர். இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேரம், அதாவது நள்ளிரவு வரை மோதல் நீடித்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மலைச்சரிவு பகுதியாகும். சண்டையின் போது இருதரப்பு வீரர்களும் மலையில் இருந்து தவறி விழுந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 16 பேர் கொடூர தாக்குதலிலும் 4 பேர் மலையில் இருந்து கீழே விழுந்தும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT