Published : 17 Jun 2020 11:15 AM
Last Updated : 17 Jun 2020 11:15 AM
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 11-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசாவும் அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.6.02 பைசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.6.40 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.73 பைசாவிலிருந்து ரூ.77.23 பைசாவாக அதிகரித்தது. டீசல் ஒரு லிட்டர் ரூ.75.19லிருந்து ரூ.75.79 பைசாவாக அதிகரித்துள்ளது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.86 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.73.69 பைசாவாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ப வாட் வரி விதிப்புக்கு ஏற்றபடி மாறுபடும்.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டம் கொண்டுவந்தபின் தொடர்ந்து 11-வது நாளாக விலை உயர்ந்து வருவது இதுதான் முதல் முறையாகும்.
கடந்த 83 நாட்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது பாய்ச்சப்படுகிறது.
கரோனாவில் மக்கள் ஏற்கெனவே மோசமாக பாதிக்கப்பட்டு வேலையிழந்து, வருமானமிழந்து இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை லாப நோக்கத்துடன் உயர்த்தக்கூடாது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT