Published : 16 Jun 2020 08:34 AM
Last Updated : 16 Jun 2020 08:34 AM
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த இருவாரங்களாக தீவிரமாக அதிகரித்துவரும் சூழலில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார்
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்ட லாக்டவுனை ஒவ்வொரு முறை நீட்டிக்கப்படுவதற்கு முன் இதேபோன்று பிரதமர் மோடி , மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி கருத்துக்களைக் கேட்டறிந்தார். அதன்பின்புதான் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது
ஆனால், இப்போது மாறுபட்ட சூழல் நிலவுகிறது. லாக்டவுனை தளர்த்துவதற்கான முதலாவது கட்டத்தில் நாடு இருந்து வருகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதுமட்டுமல்லாமல் 4-வது கட்ட லாக்டவுன் தளர்வுக்குப்பின் பல்வேறு மாநிலங்களில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பு தீவிரமடைந்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக நாடுமுழுவதும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில் நாள்தோறும் பாதிக்கப்படும் அளவு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது, ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை எட்ட உள்ளது. இந்த நேரத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பது முக்கியத்துவம் பெறுகிறது
இதற்கு முன் 5 முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று 6-வது முறையாகவும், நாளை 7-வது முறையாகவும் ஆலோசனை நடத்த உள்ளார்
இந்த ஆலோசனைக் கூட்டம் இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் வடகிழக்கு மாநில முதல்வர்கள், பஞ்சாப், அசாம், கேரள முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை நடக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர்,மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்களிடம் பிரதமர் மோடி எதை வலியுறுத்துவார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகயைில், “ லாக்டவுனை நீக்கும் முதலாவது கட்டத்தில் இருப்பதால், பொருளாதாரத்தை வேகப்படுத்துவதற்கான வழிகளை காணுங்கள் என்றும், மாநில அரசுகள் கரோனா பரிசோதனைகளின் அளவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்த வாய்ப்புள்ளது
குறிப்பாக நகர்புறங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் , மருத்துவக் கட்டமைப்பை அதிகரித்தல், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல் போன்றவற்றில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொள்ளலாம்.
நகர்புறங்களில் அதிக மக்கள் தொகைகொண்ட மாநிலங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப்பிரதேசம், டெல்லி, தெலங்கானாவில் இன்னும் நகர்ப்புறங்களில் போதுமான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநிலங்களில் உள்ள நகர்ப்புறங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் போது இங்கு கரோனா நோயாளிகள் வேகம் அதிகரிக்கக்கூடும்” எனத்தெரிவிக்கின்றன
மத்திய சுகாதாரத்துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “போதுமான அளவு பரிசோதனைகள் நடத்தும் திறன் இருந்தும் மாநில அரசுகள் கரோனா பரிசோதனை செய்வதில்லை. அவ்வாறு பரிசோதனை செய்தால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்று நினைக்கிறார்கள்.
நாட்டின் பரிசோதனை சராசரி என்பது 10 லட்சம் பேருக்கு 4,184 பேருக்கு பரிசோதனை என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 10 லட்சம் பேருக்கு 2,052 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவே பிஹாரில் படுமோசம், அங்கு 10 லட்சம் பேருக்கு 1,019 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குச்சென்றுவிட்டதால், இனிவரும் நாட்களில் கிராமங்களில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் அதைத்தடுக்க பரிசோதனை அவசியம். ஏற்கெனவே உ.பி.யில் உள்ள கிராமங்களில் கடந்த 15 நாட்களில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கத்தொடங்கிவி்ட்டது” எனத்தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT