Published : 15 Jun 2020 07:53 AM
Last Updated : 15 Jun 2020 07:53 AM
டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏற்பாடு செய்துள்ளார்.
டெல்லியில் கரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கும், மத்திய சுகாதாரத்துறை, டெல்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.
10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வருவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக வருவதற்கு 8 நாட்கள் எடுத்தநிலையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்தை 6 நாட்களில் எட்டியது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.
இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் சூழல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கேஜ்ரிவால், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மத்திய சுகாதாரத்துறை, டெல்லி மாநகர மேயர்கள், டெல்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை 11மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT