Published : 15 Jun 2020 07:07 AM
Last Updated : 15 Jun 2020 07:07 AM
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பின்னரே பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகேட்கும் ‘டயல் யுவர் இஓ’நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.இந்நிகழ்ச்சி கடந்த 4 மாதங்களாக நடைபெற வில்லை. தற்போது கோயில் மீண்டும் திறக்கப்பட்டதால், நேற்று சோதனை அடிப்படையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் சில பக்தர்கள் சில சந்தேகங்களை கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட முக்கிய தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன் பின்னர் அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேவஸ்தானத்தின் மீது சிலர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். முதலில் 1,300 ஊழியர்களை நீக்கி விட்டதாக செய்திகள் பரவின. இது முற்றிலும் தவறான செய்தியாகும். இதேபோல, கடந்த 1974-ம் ஆண்டு முதல், பராமரிக்க இயலாத சில சொத்துகளை பகிரங்க ஏலம் மூலம் விற்கப்படுவது வழக்கமானதுதான். இதை அறியாத சிலர் அசையா சொத்துகளை தேவஸ்தானம் விற்க முயல்வதாகவும் கூறினர். இதுவும் தவறாகும்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திராவிலும், ஹைதராபாத், பெங்களூரு போன்ற ஊர்களிலும் ஏழுமலையானின் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், இதைக் கூட ஸ்வீட்ஸ்டால் போன்று விநியோகம் செய்வதா? என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.
ஒரு சிறிய லட்டு தயாரிக்க தேவஸ்தானத்திற்கு ரூ.45 வரைசெலவாகிறது. ஆனால், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கஒரு லட்டு ரூ.25 வீதம் விநியோகம் செய்யப்பட்டது. கரோனா சமயத்தில் சுவாமியை தரிசிக்க இயலாதபக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தையாவது குறைந்த விலைக்கு வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதை பக்தர்கள் மிகவும் பக்தியோடு வாங்கிச் சென்றனர்.
கடந்த 11-ம் தேதி முதல் பக்தர்கள் அனைவருக்கும் ஏழுமலையான் தரிசனம் கிடைத்து வருகிறது.ஆன்லைன் மூலம் 3,000 டிக்கெட்களும், திருப்பதிக்கு நேரில் வருவோருக்கு 3,000 இலவச தரிசன டோக்கன்களையும் தினமும் வழங்கி வருகிறோம். இதில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஜூன் 30-ம் தேதி வரை தீர்ந்து விட்டது. இலவச தரிசன டோக்கன்கள் வரும் 21-ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு விட்டது. ஆதலால் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் முதலில் சம்மந்தப்பட்ட இரு மாநிலங்களில் இ-பாஸ் பெற்ற பின்னர், ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவில் கலந்தாலோசித்து டோக்கன்களை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
21-ம் தேதி தரிசனம் ரத்து
வரும் 21-ம் தேதி காலை 10.18 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, மதியம் 1.38 மணி வரை நீடிக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது. அதன் பின்னர் கோயிலில் ஆகம விதிகளின்படி சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதேபோல திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து கோயில்களும் 21-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு மேல் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT