Published : 14 Jun 2020 07:03 AM
Last Updated : 14 Jun 2020 07:03 AM
நாட்டில் கரோனா வைரஸ் பரவிவருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். நோயாளிகள் அனைவரையும் சந்திக்க முடியாத மருத்துவர்கள் அவர்களுக்கு தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) முறையில் ஆலோசனை வழங்குகின்றனர்.
தொலை மருத்துவம் அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் இது, இந்திய மருத்துவத் துறையில் முறைப்படுத்தப்படாமல் இருந்தது. கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு இதை முறைப்படுத்திய மத்திய சுகாதாரத் துறை கடந்த மார்ச் 25-ல் அதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. இதையடுத்து, மருத்துவக் காப்பீடுஅளிக்கும் நோய் சிகிச்சை பட்டியலில் தொலை மருத்துவத்தை சேர்க்க இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அரசு மற்றும்தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நேற்று முன்தினம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஐஆர்டிஏஐ வட்டாரத்தினர் கூறும்போது, “தொலை மருத்துவம் அறிமுகமானது முதல் அதை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இது மத்திய அரசால் முறைப்படுத்தப்படாமல் இருந்ததால் ஏற்கப்படவில்லை. கரோனா சூழலில் இதை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
ஐஆர்டிஏஐ அளிக்கும் பரிந்துரைகளை மருத்துவக் காப்பீடுநிறுவனங்கள் ஏற்றுக்கொள்வது வழக்கமாக உள்ளது. சிலசமயம் அவற்றில் மாற்றங்கள் செய்துகொள்வதும் உண்டு.
இதனிடையே, பிரபல மருத்துவமனைகள் சார்பிலும் தொலைமருத்துவம் பற்றி கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் மூத்தமருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற ஒரு கருத்தரங்கை இணையதளம் மூலமாக சமீபத்தில் டெல்லி தொழில் வர்த்தக சபை நடத்தியது. இதில் எழுந்த கருத்துகள் நிதி ஆயோக் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT