Published : 13 Jun 2020 05:22 PM
Last Updated : 13 Jun 2020 05:22 PM
நாட்டின் பல்வேறு நகரங்களில் கரோனா வைரஸால் சமூகப் பரவல் தொடங்கிவிட்ட நிலையில் அந்த உண்மையை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. ஐசிஎம்ஆர் சர்வே நடப்பு சூழலை வெளிப்படுத்துவதாக இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் சரமாரிக் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டியுள்ளனர்
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சமீபத்தில் 65 மாவட்டங்களில் 26,400 பேருக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்றுப் பரவல் என்பது 0.73 சதவீதம் தான் இருக்கிறது என்று தெரிவித்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, “இந்தியா நிச்சயமாக சமூகப் பரவல் கட்டத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.
ஆனால், நிலைமை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100 எட்டியபின் ஒரு லட்சத்தை எட்ட 64 நாட்கள் ஆனது. ஆனால் ஒரு லட்சம் எண்ணிக்கையிலிருந்து 2 லட்சத்தை எட்டுவதற்கு 14 நாட்களும், 2 லட்சத்திலிருந்து 3 லட்சத்தை எட்ட 10 நாட்களும் போதுமானதாக இருக்கிறது.
குறிப்பாக மும்பை, அகமதாபாத், டெல்லி, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இன்று நாட்டிலேயே அதிகபட்சமாக 129 பேர் உயிரிழந்துள்ளார்கள். 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது பாதிப்பு.
மே 18-ம் தேதி டெல்லியில் கரோனாவால் 10,054 பேர் பாதிக்கப்பட்டனர். அதாவது நாள்தோறும் சராசரியாக 127 பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அடுத்த 13 நாட்களில் டெல்லியில் கரோனா பாதிப்பு 19, 844 ஆக அதிகரித்தது.
உயிரிழப்பை எடுத்துக்கொண்டால், மே 18-ம் தேதி வரை 160 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் மே 31-ம் தேதி 473 ஆக அதிகரித்தது. டெல்லியில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் மே 28-ம் தேதி முதல் முறையாக பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து ஜூன் 3-ம் தேதி உச்சபட்சமாக 1,533 பேர் பாதிக்கப்பட்டனர், இன்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூட, 'டெல்லியில் சமூகப் பரவல் இல்லை. ஆனால், டெல்லியில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேருக்கு தொற்றின் மூலம் தெரியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், தொற்றின் மூலம் தெரியாததுதானே சமூகப் பரவல் என்று நிருபர்கள் கேட்டபோது, 'சமூகப்பரவல் வந்துவிட்டதாக நான் தெரிவிக்க முடியாது. மத்திய அரசுதான் கூற முடியும்' எனத் தெரிவித்தார்
இந்த சூழலில் பல்வேறு மருத்து வல்லுநர்கள் பல்வேறு நகரங்களில் சமூகப் பரவல் வந்துவிட்டதாகவே குற்றம் சாட்டுகிறார்கள்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் எம்.சி.மிஸ்ரா பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூகப் பரவல் வந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கரோனா பரவும் வேகமும் அதிகரிக்கிறது. மத்திய அரசு தாமாக முன்வந்து உண்மைச் சூழலைக் கூறி மக்களை எச்சரிக்கை செய்யவேண்டும். அவர்களைத் திருப்திப்படுத்தக்கூடாது.
ஐசிஎம்ஆர் 26 ஆயிரம் பேரைக் கணக்கிட்டு எடுத்த அளவு போதுமானது இல்லை. அதை வைத்துப் பரவலின் விகிதம், வேகத்தையும் கணக்கிட முடியாது. மக்கள் அடர்த்தி, பிரிவு ஆகியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
வைரலாஜி வல்லுநர் ஷாகித் ஜமீல் நிருபரிடம் கூறுகையில், “நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சமூகப் பரவல் கட்டத்தை எட்டிவிட்டது. ஆனால், சுகாதாரத்துறையினர் அதை ஏற்கவில்லை. ஐசிஎம்ஆரின் சாரி ஆய்வில் கூட 40 சதவீதம் பேர் எந்தவிதமான வெளிநாட்டுக்கும் செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுடன் பழகாமல் இருக்கும்போது அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அது சமூகப் பரவல் இல்லாமல் எதைக்குறிக்கிறது?” எனத் தெரிவித்தார்.
கங்கா ராம் மருத்துவமனையின் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் அரவிந்த் குமார் கூறுகையில், “ஐசிஎம்ஆர் வாதங்களை ஏற்பதாக இருக்கட்டும், அப்படியென்றால், டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னையில் சமூகப் பரவல்இல்லை என்று மறுக்க முடியுமா. இந்தியா பரந்துபட்ட நாடு. ஒவ்வொரு மாநிலமும் கரோனாவில் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்படுகிறது. உச்சத்தை அடையும் காலம் வேறுபாடு உடையதாக இருக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக இரு வாரம் தேவைப்படும். இந்த ஆய்வு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டதால் அதைத்தான் காட்டுகிறது. ஏப்ரல் மாதம் நம் நாட்டில் பரவல் குறைவாக இருந்தது. ஏப்ரல் சூழலை வைத்து இந்தஆய்வை எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
போர்ட்டிஸ் எக்கார்ட் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவின் தலைவர் மருத்துவர் ரவி சேகர் கூறுகையில், “நாட்டின் பல்வேறு நகரங்களில் சமூகப் பரவல் வந்துவிட்டது என்பது நன்றாகத் தெரிகிறது. மத்திய அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்கும் பணியை நிறுத்திவிட்டது. ஆனால், முன்பு தீவிரமாக தொடர்புத் தடம் காண்பதைச் செய்த மத்திய அரசு இப்போது செய்யவில்லை.
கடந்த 10 நாட்களாக டெல்லி அரசுகூட செய்யவில்லை. சமூகப் பரவல் நடக்கிறது என்பது அரசுக்கும் தெரியும். ஆனால், அதை ஏற்க மறுத்துப் பிடிவாதம் செய்கிறார்கள். ஐசிஎம்ஆர் சர்வேயை மும்பை தாராவி, டெல்லியில் செய்திருக்க வேண்டும்.
சரியான இடத்தில் இந்த சர்வேயை நடத்தாவிட்டால் முறையான முடிவுகள் நமக்குக் கிடைக்காது. நடப்புச் சூழலை வெளிக்காட்டும் விதமாக இந்த சர்வே அமையவில்லை. ஏப்ரல் மாத இறுதியில் நம் நாடு நல்ல நிலையில் இருந்தது. அப்போது இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
சமூக மருத்துவம் மற்றும் சுகாதார மையத்தின் பேராசிரியர், மருத்துவர் விகாஸ் பாஜ்பாய் கூறுகையில் “ கரோனாவில் பாதிக்கப்பட்டவரின் மூலத்தைக் கண்டறிய முடியாவி்ட்டாலே அது சமூகப் பரவல்தான். அப்போது அந்த வைரஸ் சமூகத்துக்குள் வந்துவிட்டது என்று அர்த்தம்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பரிசோதிக்கப்பட்டார்களா என்ற புள்ளிவிவரம் ஐசிஎம்ஆர் ஆய்வில் இல்லை. வைரஸ் பரவல் என்பது நாடு முழுவதும் சீராக இருக்கவேண்டியதில்லை. கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் இடத்தைத் தவிர்த்துவிட்டு ஆய்வை நடத்தினால் உண்மை நிலவரங்கள் பிரதிபலிக்காது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT