Published : 13 Jun 2020 07:10 AM
Last Updated : 13 Jun 2020 07:10 AM
கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெளி மாநிலங்களில் பணியாற்றிய உ.பி.யைச்சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வேலை இல்லாமல் உள்ளனர்.
இவர்களுக்கு தங்கள் மாநிலத்திலேயே வேலை வழங்குவதற்காக, பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தேசிய கட்டுமானவசதி வளர்ச்சி கவுன்சிலுடன் உத்தரபிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து அக்கவுன்சிலின் தலைவர் ஆர்.கே.அரோரா கூறும்போது, “உ.பி. அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்குப் பின் அவர்கள் அளித்த கைப்பேசி எண்களில் 2.85 லட்சம் தொழிலாளர்களை குறுஞ்செய்தி மூலம் தொடர்கொண்டு வருகிறோம். முதல் கட்டமாக 5,000 தொழிலாளர்கள் எங்கள் கட்டுமான திட்டங்களில் வேலை செய்யத் தொடங்கி உள்ளனர். அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 75,000 ஆக உயரும்" என்றார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 கட்டுமான நிறுவனங்கள் தேசிய கட்டிட வசதி வளர்ச்சி கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளன. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஊரடங்கால் அதன் பணிகள் தடைபட்டன. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இவர்களது ஒப்பந்த முறையிலான பணியும் முறைப்படுத்தப்படாமல் இருந்தது. இதை முறைப்படுத்தி நேரடி கண்காணிப்பில் தொழிலாளர்களுக்கு வேலைஅளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முயன்று வருகிறது.
தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பணியில் உ.பி. தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நொய்டா, மீரட், காஜியாபாத் மற்றும் லக்னோஉள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் கட்டிடப் பணிகளில் தற்போது உ.பி.யைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்கி உள்ளனர். மீதியுள்ள தொழிலாளர்களுக்கும் வரும் நாட்களில் பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஷபிமுன்னா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT