Published : 13 Jun 2020 07:05 AM
Last Updated : 13 Jun 2020 07:05 AM

கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடும் மருத்துவர்களின் தங்கும் வசதி ஊதியத்தில் குறை இருக்கக்கூடாது- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிராக போரிடும் மருத்துவர்களின் ஊதியம், தங்குமிட வசதியில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுமுதலில் உத்தரவிடப்பட்டது. கடந்த மே 15-ம் தேதி, இதுகட்டாயமில்லை என்றுமத்திய சுகாதாரத் துறை அறிவித்தது. இதன்பேரில் சுகாதார ஊழியர்கள் தங்குவதற்கான வசதியை ஏற்படுத்தித் தர சில மாநில அரசுகள் மறுத்தன. சில மாநிலங்களில் மருத்துவர்களின் ஊதியமும் குறைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் ஆருஷி ஜெயின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். "கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். அவர்கள் பணியாற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலேயே தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் போரின் முன்வரிசையில் போரிடும் வீரர்கள் ஆவர். அவர்களின் ஊதியத்தை குறைப்பது, தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? அவர்கள் ஒருபோதும் அதிருப்தி அடையக்கூடாது. ஊதியம், தங்குமிட வசதியில் அவர்களுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

சில இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 3 மாதங்களாக மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு அரசுத் தரப்பில் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x