Published : 12 Jun 2020 11:01 AM
Last Updated : 12 Jun 2020 11:01 AM
பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது, கவலைப்படாதீர்கள் என்று ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதலில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா நேற்று ட்விட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டரில் கடந்த 1939-ம் ஆண்டு பிரிட்டன் எழுத்தாளர் பிலிப் ஸ்பார்ட்டின் வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அதில் “ குஜராத், பொருளாதார ரீதியாக முன்னேறியது, கலாச்சார ரீதியாக பின்தங்கிய மாநிலம். ஆனால், மேற்குவங்கம் கலாச்சார ரீதியான முன்னேறியது, பொருளாதார ரீதியாக பின்தங்கியது. இதை பிலிப் ஸ்பாார்ட் தெரிவித்துள்ளார் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ராமச்சந்தர குஹாவுக்கு பதில் அளித்தார். அதில் “ இந்தியாவை முன்பு ஆண்ட ஆங்கிலேயர்கள் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது உயர்ந்த குடிமக்கள் கொண்ட ஒருகுழுவினர் இந்திய மக்களை பிரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
இந்த பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியர்கள் வீழ்ந்துவிடமாட்டார்கள். குஜராத்தும் சிறந்தது, மேற்கு வங்கமும் சிறந்தது. எங்களுடைய கலாச்சார அடிப்படை கட்டமைப்பு வலுவானது, பொருளாதார அபிலாஷைகள் உயர்வானவை” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ராமச்சந்திர குஹா தனது ட்விட்டரில் குஜராத் முதல்வருக்கு அளித்த பதிலில் “வரலாற்றில் இந்த தருணத்தில், வரலாற்றாசிரியரின் நகைச்சுவையான ட்வீட்களை மிகவும் ஆர்வமாக குஜராத் முதல்வர் பின்பற்றியிருந்தால் இறந்த எழுத்தாளரை மேற்கோள் காட்டி வரலாற்றாசிரியரை எளிதில் குழப்பியிருக்கலாம். குஜராத் அரசு உண்மையில் பாதுகாப்பான கரங்களில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமச்சந்திர குஹாவுக்கு பதில் அளித்தார். அதில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான ஒரு கட்டுரையின் லிங்கை பதிவிட்டார். அதில் 2-வது உலகப்போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலந்து குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த குஜராத்தின் ஜாம்நகர் மன்னர் மகராஜ் ஜாம் சாஹேப் திக்விஜய்சிங்ஜி ஜடேஜாவை போலந்து அரசுபாராட்டிய கட்டுரையையும் படத்தையும் பதிவிட்டிருந்தார்
நிர்மலா சீதாராமன் தனது ட்வி்ட்டில் “ கடந்த 1939-ம் ஆண்டு பிரிட்டன் எழுத்தாளர் பிலிப் ஸ்ப்ராட் குறிப்பிட்டது போல் குஜராத் மாநிலம் கலாச்சாரத்தில் பின்தங்கியிருந்தால், போலந்து நாட்டின் ஆயிரம் குழந்தைகளை ஜாம்நகர் மகராஜா காப்பாற்றியிருக்கமாட்டேரே” எனத் தெரிவி்த்திருந்தார்.
இதற்கு பதிலாக ராமச்சந்திர குஹா பதிவிட்ட கருத்தில் “"குஜராத் முதல்வர் மட்டும் தான் எனது கருத்துக்களை கவனிக்கிறார், எனது கருத்துக்களால் கவலைப்படுகிறார் என்று நான் நினைத்தேன், ஆனால் இப்போது நிதியமைச்சர் கூம் கூட ஒரு வரலாற்றாசிரியரின் ட்வீட்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது. பொருளாதாரம் நிச்சயமாக பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது” எனக் கிண்டலாகத் தெரிவித்தார்
இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் “ நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது, இதுபற்றி குஹா கவலைப்பட வேண்டாம். நாட்டில் தற்போது நடந்துவரும் விவாதத்தை கருத்தில் கொண்டு பொறுப்புடன் எனது பணியைச் செய்கிறேன். அறிவார்ந்த உங்களைப் போன்றவர்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT